Published : 14 Feb 2024 03:44 PM
Last Updated : 14 Feb 2024 03:44 PM
புதுடெல்லி: “நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், அரசு மிருகத்தனமான பலத்தை விவசாயிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது. அவர்களை எதிரிகளைப் போல நடத்துகிறது” என்று விவசாய சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டினர். பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியின் இரண்டாவது நாளில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மறுபுறம், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஏற்கெனவே விவசாயிகளின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பஞ்சாபிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை டெல்லி சலோ பேரணியைத் தொடங்கினர். இந்தப் பேரணியை பஞ்சாப் அரசு தடுக்கவில்லை. பேரணி இரண்டு மணி நேரத்தில் பஞ்சாப் ஹரியாணா எல்லையைத் தொட்டதும் அங்குள்ள ஷம்பு எல்லையில் விவசாயிகளை அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீறிச் செல்ல விவசாயிகள் முயன்றபோது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பஞ்சாபின் மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், விவசாயிகளின் போராட்ட பேரணி இன்று மீண்டும் தொடங்கியது. எந்தக் காரணம் கொண்டும் விவசாயிகளை தங்களின் எல்லையைத் தாண்டவிடக் கூடாது என்று உறுதியாக உள்ள ஹரியாணா அரசு, எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதனிடையே, பஞ்சாப் - ஹரியாணா எல்லையான ஷம்புவில் இருந்து விவசாயிகளின் பேரணி இரண்டாவது நாளில் இன்று மீண்டும் தொடங்கியபோது தடுப்புகளை விவசாயிகள் நெருங்க விடாமல் தடுத்தனர். இதனால் விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஹரியாணா போலீஸார் பல முறை கண்ணீர் புகை குண்டு வீசினர்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் தாக்குதல் நடத்த பஞ்சாப் அரசு அனுமதிக்கக் கூடாது என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "பஞ்சாப் அரசு அதன் பிராந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். நமது மண்ணில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பஞ்சாபி விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸ் நடத்தும் தாக்குதலை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய இரண்டாவது நாள் போராட்டத்தில் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டபோதிலும் அவர்கள் இன்னும் ஹரியாணா எல்லைக்குள் நுழையவில்லை. இந்த நிலையில், விவசாயிகளின் பேரணி போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் இரண்டாவது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இன்றைய இரண்டாவது நாளில் ஷம்பு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், "விவசாயிகளின் போராட்டம், அரசியல் சாராமல், அமைதியான முறையில் நடந்து வரும் நிலையில், அரசு அவர்களை இழிவுபடுத்துகிறது. முதன்முறையாக விவசாயிகளுக்கு எதிராக துணை ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவே விரும்புகிறோம். நாங்கள் அரசாங்கத்துடன் மோத விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
இதனிடையே, வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரை அமல்படுத்தப்படும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உறுதி வழங்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய யுபிஏ அரசு சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிப்.16-ம் தேதி பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ள விவசாய அமைப்புகள், சந்திப்பு தொடர்பாக அரசிடம் இருந்து அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளன. போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வியாழக்கிழமை பஞ்சாப்பில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு பிகேயு (எக்தா-உக்ரகான்) அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாறு விவசாயிகள் நடந்து கொள்ளக் கூடாது. விவசாய சங்கங்களுடன் நேர்மறையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களின் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், தற்போது பேசப்பட்டு வரும் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும். மாறாக, அதன் அனைத்து அம்சங்களையும் மனிதல் வைத்து விவாதிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT