Published : 14 Feb 2024 01:32 PM
Last Updated : 14 Feb 2024 01:32 PM
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெய்ப்பூரில் இருந்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர்தா உடன் இருந்தனர்.
ராஜஸ்தானில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிச்சயம் என்பதால் அந்தப் பதவிக்கு, சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்ளவை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கிறார். கடந்த 1997 டிசம்பரில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார்.
கடந்த மக்களவைத் தேர்தலிலும் ரேபரேலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சோனியா காந்தி, வரும் மக்களவைத் தேர்தலில் ரேபரேலியில் போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வரும் ஏப்ரல் மாதத்துடன் 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வுபெற இருக்கிறார்கள். புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்.27ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்.15ம் தேதி கடைசி நாளாகும்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு போதிய எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு தேர்தல் நடைபெற உள்ள 3 இடங்களில் ஒன்றில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்பதால், சோனியா காந்தி அங்கிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1964 ஆக. முதல் 1967 பிப். வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அதன் பின்னர் காந்தி குடும்பத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக நுழைய இருப்பவர் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT