Published : 14 Feb 2024 12:23 PM
Last Updated : 14 Feb 2024 12:23 PM

டெல்லி நுழைய முயன்ற விவசாயிகள் மீது 2-வது நாளாக கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கிய பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கிய விவாசயிகள், இரவு இடைநிறுத்ததுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக பேரணியைத் தொடங்கினர். பலத்த பாதுகாப்பு தடைகளை மீறி டெல்லி செல்ல மீண்டும் ஒரு முயற்சியை அவர்கள் எடுத்தனர். எனினும், விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் இருக்க ஹரியானாவின் ஷம்பு எல்லையில் போலீஸார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்தனர்.

நேற்று இரவு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்த விவசாயிகள் இன்று போராட்டம் மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்திருந்தனர். விவசாயிகள் இன்று மீண்டும் தடைகளை உடைக்க முயற்சிப்பார்கள் என்ற அச்சத்தால் கூடுதல் படைகள் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் டெல்லி நோக்கிய பயணத்தில் பஞ்சாப் ஹரியாணா எல்லைகளை கடக்க முயன்ற அவர்களைத் தடுக்க கண்ணீர் புகை குண்டு வீசி, தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது, முந்தைய 2020 -21 விவசாயிகளின் போராட்டங்களை நினைவுகூரச்செய்தது. மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் போராட்டம் 13 மாதங்கள் நீடித்து டெல்லியின் எல்லைகளைத் திணறடிக்கச் செய்தது.

இதனிடையே, இன்று தங்களின் டெல்லி சலோ பேரணியைத் தொடர பஞ்சாப் ஹரியாணா எல்லையான ஷம்புவில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்து நின்றனர். விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் தடுக்க ஹரியாணா போலீஸார் புதன்கிழமை மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த முறையும் நீண்ட பயணத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், டெல்லி செல்லும் அளவுக்கு டீசலும், ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுபொருள்களும் கையிருப்பில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். செய்தி நிறுவனம் ஒன்றிடம் விவசாயி ஒருவர் கூறுகையில், எவ்வளவு காலமானாலும் தங்களின் கோரிக்கை நிறைவேறாமல் திரும்பப் போவதில்லை என்று தெரிவித்தார்.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் மூன்று முக்கிய கோரிக்கைகளான, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் போன்றவைகளைத் தவிர பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முற்றுகைகளைக் கைவிட்டு விட்டு மேலும் பேச்சுவார்த்தைக்கு வரும் படி அரசாங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்தது. என்றாலும் அரசுக்கு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை. அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாயிகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதால் பேச்சுவார்த்தைக்கு கால அவகாசம் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று தெரிவித்தார். விவசாயிகள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்திய அமைச்சர், புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் மற்றும் ஆணிப்படுக்கைகள் கொண்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று ஹரியானாவின் ஷம்பு எல்லையில் நேற்று நடந்த அதிரடியினைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விவாசாயிகளின் போராட்டம் காரணமாக மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை கைது செய்து அடைக்க மைதானம் ஒன்றை தற்காலிக சிறையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை அரவிந்த் கேஜ்ரிவால் அரசு நிராகரித்தது. இந்தநிலையில் டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டக்கார்கள் நகருக்குள் நுழைந்து விடாமல் தடுக்க போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த பல அடுக்கு போக்குவரத்து மாற்றங்களால் அதன் துணைநகரப் பகுதிகளில் நேற்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு புறநகர் பகுதிகளில் தவழ்ந்து செல்லும் வாகன நெரிசலால் பயணிகள் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் மணிக்கணக்காக காத்திருக்கும் நிலை உருவானது. இன்றும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x