Published : 14 Feb 2024 05:36 AM
Last Updated : 14 Feb 2024 05:36 AM
பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54).இவரது மனைவி புஜ்ஜி அம்மா (52). இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த1-ம் தேதி வீட்டில் நடந்த சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி அம்மாவுக்கு 50 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
போதிய பணம் இல்லாததால் சிகிச்சையின் இடையிலேயே அவர் வீட்டுக்குத் திரும்பினார். இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
இதனால் கணவர் சிபாராமும், உறவினர்களும் புஜ்ஜி அம்மா இறந்துவிட்டதாகக் கருதினர்.உறவினர்களும் அவரது வீட்டுக்கு வந்து இறுதி மரியாதையைச் செய்தனர். இதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திங்கள்கிழமை மாலை இறுதிச் சடங்குக்காக அமரர் ஊர்தியில் புஜ்ஜி அம்மாவின் உடல் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. கடைசி நேரத்தில் சிதைக்கு தீவைக்க முயன்ற நேரத்தில் புஜ்ஜி அம்மா கண் திறந்து பார்த்தார். இதையடுத்து அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்த உறவினர்கள் ‘பேய்’ என்று அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் பார்வதி பிரதானின் கணவர் சிபா பிரதான்கூறும்போது, “நாங்கள்தான் அவரை சுடுகாட்டுக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றோம். சிதைக்கு தீ மூட்ட முயன்றபோது அவர் கண் விழித்ததால் உறவினர்கள் பயந்து ஓடிவிட்டனர். பின்னர் அவர் உயிரிழக்கவில்லை என்று அறிந்துகொண்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தோம்” என்றார்.
புஜ்ஜி அம்மா வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிரன்ஜிபி கூறும்போது, “சுடுகாட்டில் புஜ்ஜி அம்மா கண்திறந்து பேசியபோது நாங்கள் பயந்துவிட்டோம். தொடக்கத்தில் பயந்தாலும், பின்னர் சுதாரித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். பலர் சுடுகாட்டுக்குச் சென்று பிழைத்தகதைகளை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்’’ என்றார்.
சிகிச்சைக்குப் பின்னர் புஜ்ஜி அம்மா தற்போது வீடு திரும்பி உள்ளார். இந்த சம்பவம் பெர்ஹாம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT