Published : 14 Feb 2024 04:37 AM
Last Updated : 14 Feb 2024 04:37 AM

டிராக்டர்களுடன் நுழைந்து டெல்லியை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

டெல்லியை நோக்கி செல்வதற்காக பாட்டியாலா அருகே பஞ்சாப் - ஹரியாணா ஷம்பு எல்லையில் நேற்று ஒன்றுதிரண்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர்.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், 2 மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டருடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.

6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், டீசல் உள்ளிட்டவற்றுடன் அவர்கள் டெல்லி நோக்கி சென்றனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, எல்லை பகுதிகளில் சீல் வைத்து பல்வேறு தடைகளை போலீஸார் ஏற்படுத்தியிருந்தனர்.

தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் நேற்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர். பலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை அதிகாரி ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது:

பஞ்சாப் - ஹரியாணா உட்பட அனைத்து எல்லை பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் விவசாயிகளை தங்கவைக்க, பெரிய பகுதியை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். பஞ்சாப், ஹரியாணா எல்லை பகுதிகளில் கான்கிரீட் தடுப்புகள், ஆணிகள், முள்வேலிகளை கொண்டு சாலைகளில் அரண் அமைத்துள்ளோம். டெல்லி நகரை சுற்றிலும் கூட்டம் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் விவசாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறியதாவது: பஞ்சாப், ஹரியாணாவை ஒட்டிய எல்லை பகுதிகள், முள்வேலிகளால் அடைக்கப்பட்டிருப்பது, சர்வதேச எல்லையை நினைவுபடுத்துகிறது. ஹரியாணா மாநில விவசாயிகளை துன்புறுத்தும் நடவடிக்கையில் மனோகர் லால் கட்டார் அரசு ஈடுபட்டுள்ளது.

விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டம் 13 மாதங்களுக்கு மேல் நீடித்தது. வெயில், மழையை பொருட்படுத்தாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லையில் தங்கி போராட்டத்தை தொடர்ந்தோம். தற்போதும் அதுபோன்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். 6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன்தான் வந்துள்ளோம். கடந்த முறை நடந்த போராட்டத்தின்போது மத்திய அரசுகொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. ஆனால், இந்த முறை எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னரே போராட்டத்தை கைவிடுவோம்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள், வேளாண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதல் 2013 சட்டத்தை மீண்டும் அமலாக்குதல் உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து, அடக்குமுறைகள் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ‘வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி பயிர்களுக்கு ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்’ என்று ராகுல் காந்திஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x