Published : 04 Aug 2014 09:57 AM
Last Updated : 04 Aug 2014 09:57 AM

இலங்கைக்கான தூதரக அதிகாரியை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: இந்தியாவின் நெருக்குதலால் முடிவு

தென்னிந்தியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்களை தாக்கும் சதியில் தொடர்புடைய பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இலங்கையில் இருந்து வெளி யேற்ற வேண்டும் என்று இந்தியா நெருக்குதல் அளித்துவந்த வேளையில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பாகிஸ்தான் சத்த மின்றி திரும்ப அழைத்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, “அமீர் ஜுபேர் சிடிக்கி என்ற இந்த அதிகாரி தனது தூதரக பணிக்கு விரோதமாக செயல்படுவது குறித்து பரஸ்பர சட்ட உதவி உடன்பாட்டின் கீழ் என்ஐஏ எழுதிய கடிதம் கொழும்பு செல்வதற்கு முன் அவர் அங்கிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்” என்றனர்.

என்றாலும் பாகிஸ்தான் அரசு இதனை மறைக்கும் விதமாக, “இலங்கையில் சிடிக்கியின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவர் நாடு திரும்பினார்” என்று கூறியுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை தாக்குவதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் வகுத்திருந்த சதித்திட்டம் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அம்பலமானது. இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது, இந்த சதிக்கு சிடிக்கி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x