Published : 13 Feb 2024 08:12 PM
Last Updated : 13 Feb 2024 08:12 PM

ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு, தடியடி

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசினர். தண்ணீரை பீச்சி அடித்தனர். ஹரியாணாவின் கானவுரி என்ற இடத்தில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (பிப்.13) டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. அதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் - ஹரியாணா, ஹரியாணா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பஞ்சாப் அரசு, அவர்களை ராஜ்புரா புறவழிச்சாலையை கடக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தங்களின் டெல்லி பயணத்தின் வழியிலுள்ள ஹரியாணாவின் ஆம்பலா எல்லையை விவசாயிகள் அடைந்தனர். விவசாயிகளின் பேரணியை எல்லையிலேயே தடுப்பதற்காக ஏற்கெனவே அங்கே சிமென்ட் தடுப்புகள், முள்வேலிகள் வைக்கப்பட்டிருந்தன. ஹரியாணாவின் ஷம்பு பகுதியை விவசாயிகள் அடைந்ததும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் டிராக்டர்கள் மூலமாக தடுப்புகளை உடைக்க முயன்றனர். இதனால் அங்கே பதற்றம் உருவானது. விவசாயிகள் போலீஸாரின் பலத்த தடையை மீறி செல்ல முயன்றனர். சிலர் தடுப்புகளை அகற்றினர். இதனைத் தொடர்ந்து ஹரியாணா போலீஸார், விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். கண்ணீர்க் புகை குண்டுகளை வீச ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. விவசாயிகளைக் கலைக்க இயந்திரங்கள் மூலம் தண்ணீ்ர் பீய்ச்சப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் கற்களை வீசினர்.

காங்கிரஸ் எம்எல்ஏ சக்பால் கைரா ஷம்பு பகுதிக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தார். ஹரியாணாவின் ஜிந்த் பகுதியிலுள்ள கானவுரி என்ற இடத்தில் பஞ்சாப் விவசாயிகளுக்கு போலீஸாருக்கும் இடையை மோதல் ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசியதுடன் தடியடியும் நடத்தினர், இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக குருகிராம் - டெல்லி எல்லையில் உள்ள ஷிர்கவுல் அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல், குறைந்தது 15 மணலுடன் கூடிய டிம்பர்கள், 200 தடுப்புகள், ட்ரோன்கள், முள்வேலிகள், கலவரத்தடுப்பு உபரகணங்களுடன் 150 - 200 வரையிலான போலீஸார் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, டெல்லி நோக்கிச் செல்லும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழகத்தின் திருச்சியில் இருந்து விவசாயிகள் சென்று பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் மண்டை ஓடுகளுடன் சாலையில் படுத்ததும் சிலர் செல்போன் கோபுரம் மீது ஏறியும் நின்று போரட்டம் நடத்தி ஆதரவளித்தனர்.

மத்திய டெல்லியில் துணை ராணுவம் மற்றும் போலீஸார் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி செங்கோட்டை திடீரென பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டது. மீண்டும் திறப்பதற்கு பாதுகாப்பான சூழல் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் கருதும் வரையில் இது மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி - நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க காசிபூர், சிங்கு மற்றும் திக்ரி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயில் நுழைவதைத் தடுக்க போலீசார் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் தேசிய தலைநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராஜீவ் சவுக், மன்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்ரீயேட், படேல் சவுக், உத்யோக் பவன், ஜனபத், பரகம்பா சாலை, கான் மார்கெட் உள்ளிட்ட முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு கதவுகள் மூடப்பட்டன. என்றாலும் ரயில் நிலையங்கள் இயங்கின திறந்திருந்த சில கதவுகள் வழியாக பயணிகள் உள்ளே வந்து வெளியேறினர்.

இதனிடையே, ஹரியாணாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசிய நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இது பாஜகவின் கொடுமையான தாக்குதல் என்று கண்டித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “சுவாமிநாதன் கமிஷன் உத்தரவுப் படி, விவசாயிகளின் பயிர்களுக்கு எம்எஸ்பி-க்கு சட்டபூர்வமான உத்தரவாதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை 15 கோடி விவசாய குடும்பங்களின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.

டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று காலை தொடங்கிய நிலையில், கிசான் மஸ்தூர் சங்தர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பன்தேர் கூறுகையில், "பஞ்சாப், ஹரியாணா எல்லைகள் மாநில எல்லைகளைப் போல தெரியவில்லை. அவை சர்வதேச எல்லைகளைப் போல மாறியுள்ளன. இன்றும் சாலைகளை மறிப்போம் என்று நாங்கள் கூறவில்லை. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அரசே சாலைகளை மறித்துள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x