Published : 13 Feb 2024 03:23 PM
Last Updated : 13 Feb 2024 03:23 PM

இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் சில தினங்களில் இறுதி வடிவம் பெறும்: ஜெயராம் ரமேஷ்

அம்பிகாபூர் (சத்தீஸ்கர்): இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் சில தினங்களில் இறுதி வடிவம் பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அம்பிகாபூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் ரமேஷ், “இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மேற்கொள்வதில் சிறிய தாமதம் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நாங்கள் மாநில அளவில் உள்ள சில கட்சிகளுக்கு எதிராகவும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதன் காரணமாகவே, தொகுதிப் பங்கீட்டில் சில சவால்கள் ஏற்படுகின்றன.

இண்டியா கூட்டணி என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானது. டெல்லியிலும், பஞ்சாபிலும் நாங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறோம். அதேநேரத்தில், பாஜகவை தோற்கடிக்க நாங்கள் தேசிய அளவில் ஒற்றுமையாக இருக்கிறோம். இதில் உள்ள சில பிரச்சினைகளை தீர்க்க கொஞ்சம் நேரம் ஆகிறது. இது முன்பே நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சில பிரச்சினைகள் இருந்ததன் காரணமாகவே தள்ளிப் போனது.

திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றோடு தொகுதி பங்கீடு மேற்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியுடனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும் தொகுதி பங்கீடு மேற்கொள்வதில்தான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

ஆம் ஆத்மியைப் பொறுத்தவரை டெல்லியில்கூட எங்களுக்கு பிரச்சினை இல்லை. பஞ்சாபில் மட்டும்தான் பிரச்சினை. பஞ்சாபில் ஆம் ஆத்மியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன. நாங்களும் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். இரு தரப்பும் ஒப்புக்கொள்ளக்கூடிய சமரச வழியை நாங்கள் காண இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x