Published : 13 Feb 2024 02:18 PM
Last Updated : 13 Feb 2024 02:18 PM

கண்ணீர்ப் புகை, முள்வேலி, போலீஸ் தடுப்பு - ஹரியாணா எல்லையில் பதற்றம் @ விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி

புதுடெல்லி: தேசிய தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியாணா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசி தடுத்துள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பிப்ரவரி 13-ம் தேதி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. அதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து இன்று காலையில் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் - ஹரியாணா, ஹரியாணா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பகுதிளில் சிமென்ட் தடுப்புகள், முள்படுக்கை, முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன.

கண்ணீர் புகை குண்டுவீச்சு: விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.

நாங்கள் சாலைகளை மறிக்கவில்லை: பஞ்சாப்பில் இருந்து டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், கிசான் மஸ்தூர் சங்தர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பன்தேர் கூறுகையில், "பஞ்சாப், ஹரியாணா எல்லைகள் மாநில எல்லைகளைப் போல தெரியவில்லை. அவை சர்வதேச எல்லைகளைப் போல மாறியுள்ளன. இன்றும் சாலைகளை மறிப்போம் என்று நாங்கள் கூறவில்லை. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அரசே சாலைகளை மறித்துள்ளன” என்றார்.

காங்கிரஸ் எங்களுடன் இல்லை: கிஷான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பு கூறுகையில், "டெல்லி பேரணிக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. பாஜகவைப் போல காங்கிரஸும் இதற்குக் காரணம் என்றே நாங்கள் கருதுகிறோம். இந்தச் சட்டங்கள் காங்கிரஸாலேயே கொண்டுவரப்பட்டன. நாங்கள், மேற்கு வங்கத்தை ஆண்ட சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளையும் விடவில்லை. அவர்கள் 20 தவறுகள் செய்தார்கள். மேற்கு வங்கத்தில் இருந்து என்ன புரட்சி வந்தது. நாங்கள் யார் பக்கமும் இல்லை. நாங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள்" என்றார்.

டெல்லி அரசு விவசாயிகளுடன் நிற்கும்: இதனிடையே ஆம் ஆத்மி அரசு விவசாயிகளுடன் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. டெல்லி பவானா மைதானத்தை விவசாயிகளை கைது செய்து அடைப்பதற்கான தற்காலிக சிறையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவை டெல்லி ஆம் ஆத்மி அரசு நிராகரித்துள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், "விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விவசாயிகள் நமது நாட்டு மக்களின் பசியாற்றுவோர். அவர்களை கைது செய்யும் நடைமுறை, வெந்தப் புண்ணில் உப்பைத் தடவுவதற்குச் சமம். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மோடி அரசு மீது கார்கே தாக்கு: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவொன்றில், "முள்கம்பி வேலி, கண்ணீர்ப் புகை, ஆணி மற்றும் துப்பாக்கிகள் எல்லாமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை அடக்க முயற்சிக்கிறது.

விவசாயிகளை அவர் (மோடி) கிளர்ச்சியாளர்கள், ஒட்டுண்ணி என்று அழைத்து அவமதித்து, 750 உயிர்களை பறித்தது நினைவு இருக்கிறதா? கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு அன்னமிடுபவர்களுக்கு வழங்கிய 2022-ல் இருந்து விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், சுவாமிநாதன் அறிக்கையின்படி, உள்ளீட்டு செலவு + 50 சதவீதம் குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து ஆகிய மூன்று உறுதி மொழிகளை மோடி அரசு மீறியுள்ளது.

இது நாட்டின் 62 கோடி விவசாயிகளின் குரலை உயர்த்தும் நேரம். விவசாய அமைப்புகளுக்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு. அஞ்சமாட்டோம்.. அடிபணிய மாட்டோம்" என்று கார்கே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x