Published : 13 Feb 2024 01:47 PM
Last Updated : 13 Feb 2024 01:47 PM
புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு வழங்கியது. இதையடுத்து சுவாமி நாராயண் கோயில் கட்டும் பணிக்கு அப்போது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கோயில் பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயிலை பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வது இது ஏழாவது முறையாகும்.
அபுதாபியில் உள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயில், போச்சசன்வாசி அக்சர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா(பாப்ஸ்) எனும் அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழா நாளை ( பிப்ரவரி 14-ம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பலர் பங்கேற்கின்றனர். 2 நாள் பயணத்தின் போது அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் தொடர்ந்து துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்று அவர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
தனது பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்குச் செல்கிறேன். எனது இந்த பயணம் இவ்விரு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். பிரதமராக பதவியேற்ற பின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏழாவது முறையாக செல்கிறேன். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள நட்புறவின் ஆழத்தை இது காட்டுகிறது. எனது சகோதரர் முகம்மது பின் ஜயாதை சந்திக்க இருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைக்கும் கவுரவத்தைப் பெற இருக்கிறேன். அபுதாபியில் உள்ள இந்திய சமூகத்துடன் உரையாட உள்ளேன். கத்தார் அதிபர் தமிம் பின் ஹமாத்-ஐ சந்திக்க உள்ளேன். தமிம் பின் ஹமாத் தலைமையில் கத்தார் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 35 லட்சம் இந்திய நாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் அந்த நாட்டில் இந்திய நாட்டு மக்கள் மிகப்பெரிய வெளிநாட்டவர் குழுவை உருவாக்கியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே வலுவான உறவை வளர்ப்பதில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT