Published : 13 Feb 2024 09:21 AM
Last Updated : 13 Feb 2024 09:21 AM

பாஜகவில் இணைகிறார் அசோக் சவான்?- காங்கிரஸிலிருந்து விலகிய அடுத்த நாளே அதிரடி

அசோக் சவான் | கோப்புப் படம்.

புனே: காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) விலகிய மூத்த தலைவர் அசோக் சவான் இன்று (பிப்.13) பகல் 12 மணியளவில் மும்பை பாஜக அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 48 மணி நேரத்தில் தனது அடுத்தக்கட்ட நகர்வை அறிவிப்பதாக அசோக் சவான் கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸில் இருந்து விலகிய அடுத்த நாளை அவர் பாஜகவில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 27-ல் மகாராஷ்டிராவில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சவானின் விலகல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபருக்குள் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவானின் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த விலகல் அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர். இந்த நிலையில் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகியதோடு, பாஜகவிலும் இணைவது சிக்கலை ஏற்படுத்துகிறது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அசோக் சவான், “எனது எதிர்கால திட்டம் தொடர்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் நான் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடிய நபர் நான் இல்லை.” என்றார். உங்களோடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் வருகிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சவான், “எனது முடிவு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரிடமும் நான் பேசவில்லை. என்னோடு சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உள்நோக்கமும் எனக்கு இல்லை” எனக் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x