Published : 13 Feb 2024 05:53 AM
Last Updated : 13 Feb 2024 05:53 AM
மினிக்காய்: விசைப் படகு இன்ஜின் கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த 11 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்கள், அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 5-ம் தேதி அவர்களது விசைப்படகின் (IND-TN-12-MM-6466) இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 11 தமிழக மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். அந்த வழியாக சென்ற இந்திய கடலோர காவல் படையின் விக்ரம் ரோந்து கப்பலை சேர்ந்த அதிகாரிகள், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பரிதவிப்பதை கண்டுபிடித்தனர். மீன்பிடி விசைப்படகின் இன்ஜின் கோளாறை சரி செய்ய கடலோர காவல் படை வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து விக்ரம் ரோந்து கப்பல் மூலம் 280 கடல் மைல் தொலை வுக்கு விசைப்படகை இழுத்து வந்து லட்சத்தீவின் மினிக்காய் தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசைப்படகு இன்ஜின் கோளாறை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று காலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், விசைப்படகு இன்ஜின் கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு லட்சத்தீவின் மினிக்காய் தீவில் உள்ள கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக விசைப்படகையும், தமிழக மீனவர்களையும் மீட்டபோது எடுத்த புகைப்படங்களையும் கடலோர காவல்படை சமூக வலைதளத்தில் வெளியிட்டுஉள்ளது. நடுக்கடலில் தங்களை மீட்டகடலோர காவல் படை அதிகாரிகள்,வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றிதெரிவித்து உள்ளனர். அதோடு சமூகவலைதளங்களில் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விக்ரம் ரோந்து கப்பல்: தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டுமான தளத்தில் விக்ரம் ரோந்து கப்பல் தயார் செய்யப்பட்டது. இந்த கப்பல் தற்போது அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த டிசம்பரில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான இந்திய சரக்கு கப்பலை, விக்ரம் ரோந்து கப்பல் வெற்றிகரமாக மீட்டது நினைவுகூரத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT