Published : 13 Feb 2024 06:38 AM
Last Updated : 13 Feb 2024 06:38 AM
புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் இன்று டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மூன்று மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது போன்ற போராட்ட சூழல் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போலீஸார் மேற்கொண்டுள்ளனர். டெல்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், டிராக்டர், லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12 வரை 144 தடை பிறப்பித்து போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சஞ்சய் அரோரா கூறியதாவது:
சுமார் 200 விவசாய சங்கங்கள் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த நிலையில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் கூட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் டெல்லி மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. டெல்லிக்கு வரும் 3 மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்புகள் கொண்டு எல்லைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
பேரணி நடைபெறும் நிலையில், இன்றே (நேற்று) எல்லை பகுதிகளுக்கு விவசாயிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 12-ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி நகருக்குள் துப்பாக்கிகள், எரியக் கூடிய பொருட்கள், செங்கல், கற்கள், பெட்ரோல் கேன்கள் அல்லது சோடா பாட்டில் ஆகியவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம், பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகமாக சத்தம் ஏற்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு டெல்லி போலீஸ் கமிஷனர்சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் ஏற்கெனவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராட்டம் நடத்தியதால், இந்த முறை அதுபோல் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT