Published : 13 Feb 2024 12:55 AM
Last Updated : 13 Feb 2024 12:55 AM
சண்டிகர்: சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (பிப்.13) டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. இந்த சூழலில், சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (பிப்.12) மாலை 5.30 மணியளவில் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்து தோல்வி அடைந்தது. இந்நிலையில், தங்கள் திட்டத்தின் படி டெல்லி செல்ல விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உ.பி., பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
“இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தது. எங்களது ஒவ்வொரு கோரிக்கை மீதும் விவாதம் நடந்தது. ஆனால், அவை வெறும் கோரிக்கைகள் அல்ல, அவை அனைத்தும் அரசின் வாக்குறுதிகள். அதனால் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டெல்லி நோக்கி செல்ல வேண்டும் என்பது என் கருத்து” என விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்தார்.
அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அதில் கலந்து கொள்ள நாங்கள் தயார். அதே நேரத்தில் நாங்கள் இன்று டெல்லி நோக்கி செல்வோம் என விவசாய சங்க பிரதிநிதி சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
“பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காண அரசு விரும்புகிறது. சில கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டது. நிரந்தரத் தீர்வுக்கு குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்தோம். எந்தப் பிரச்சினையானாலும் விவாதித்து தீர்வு காணலாம். நாங்கள் அந்த தீர்வை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி முதல் கட்டமாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை துவங்கியது. அதன்பிறகு பிப்.10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment