Published : 12 Feb 2024 06:08 PM
Last Updated : 12 Feb 2024 06:08 PM

பாஜகவில் இணைய திட்டமா? - 2 நாட்களில் சொல்வதாக அசோக் சவான் தகவல்

மும்பை: தனது எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அசோக் சவான், "சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் தெளிவுபடுத்துகிறேன்" என தெரிவித்தார். அப்போது, நீங்கள் பாஜகவில் இணையப் போகிறீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அசோக் சவான், இன்னும் 48 மணி நேரத்தில் சொல்கிறேன் என கூறினார்.

தனது எதிர்கால திட்டம் தொடர்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் தான் பேசவில்லை என தெரிவித்த அசோக் சவான், கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடிய நபர் தான் இல்லை என்றும் குறிப்பிட்டார். உங்களோடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் வருகிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சவான், "எனது முடிவு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரிடமும் நான் பேசவில்லை. என்னோடு சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உள்நோக்கமும் எனக்கு இல்லை" என கூறினார்.

முதலில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சவான், அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலிக்கு அனுப்பி உள்ளார்.

அசோக் சவான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்” என்றார். அசோக் சவானோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்களான சுபாஷ் தோட்டி, ஜித்தேஷ் அந்தர்புர்கர், அமர் ராஜூர்கர் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபருக்குள் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x