Published : 11 Feb 2024 04:56 PM
Last Updated : 11 Feb 2024 04:56 PM
ஆந்திரா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சிக்காக ஷர்மிளா பிரச்சாரம் செய்து வருகிறார்.
குறிப்பாக அவர் தனது சகோதரரும், ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை தீவிரமாக விமர்சித்து வருகிறார். மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளாவின் குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் எதிர்கொள்ள முடியாமலும், ஷர்மிளாவை விமர்சிக்க முடியாமலும் திகைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டம், பாடேரு தொகுதி சிந்தபல்லியில் ஷர்மிளா பேசியதாவது: முதல்வர் ஜெகன், பாஜகவின் அடிமையாகவே மாறிவிட்டார். சிங்கம், புலி என கூறிக் கொள்ளும் அவர், உண்மையிலே பாஜக முன் ஒரு பூனை போல் ஆகிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, ஆந்திராவுக்கு கொடுத்த மாநில பிரிவினை வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இரண்டுமே பாஜகவின் கைப்பாவைகளாக மாறிவிட்டன. மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, போலாவரம் அணை கட்டும் பணிகள், ஆந்திர மாநிலத்தின் தலைநகர பிரச்சினை போன்றவை நிரந்தரமாக தீர்க்கப்படும். தேர்தலின் போது கொடுக்கப்படும் பணம் மணல் கொள்ளை, மதுபான மாஃபியா, பாக்ஸைட் போன்றவற்றால் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகும். மிகவும் யோசித்து வாக்களியுங்கள். அல்லூரி சீதாராம ராஜு எனும் சுதந்திர போராட்ட வீரர், ஆங்கிலேயர்களை எப்படி விரட்டி அடித்தாரோ, அதுபோல், இந்த சர்வாதிகார ஆட்சியையும் ஓட ஓட விரட்டி அடியுங்கள். இவ்வாறு ஒய்.எஸ்.ஷர்மிளா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT