Published : 11 Feb 2024 05:08 AM
Last Updated : 11 Feb 2024 05:08 AM
புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், பழங்குடியினர் அதிகமாக பலன் அடைந்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் அரசு சார்பில் வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த குஜராத் திட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத்தில் அண்மையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. குஜராத்தின் அனைத்துப் பகுதிகளும் அதிவேகமாக வளர்ச்சிஅடைந்து வருகின்றன.ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது பாஜக அரசின் லட்சியம். இதன்படி இன்றைய தினம் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் குஜராத் முழுவதும் 1.25 லட்சம் வீடுகளை கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டு உள்ளது.
பனாஸ்கந்தா, அம்பாஜி, பதான் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி நிலவியது. அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களால் விவசாயம் செழித்தோங்கி வருகிறது.
எனது சொந்த கிராமமான வத்நகரில் அண்மையில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கைவினைப் பொருட்கள் கிடைத்தன. இதன்காரணமாக வத்நகருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கேவடியாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேல் சிலையால் வடக்கு குஜராத் பகுதி சுற்றுலாதலமாக உருவெடுத்துள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில்குஜராத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இயக்கங்கள் நடத்தப்பட்டன. அப்போது நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற இலக்குநிர்ணயிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றனர்.
தற்போது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இயக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் குஜராத்தில் 9 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள், ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள், உஜ்வாலா திட்டத்தில் இலவச சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழைகள் பலன் அடைந்து வருகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அதிகமாக பலன் அடைந்து வருகின்றனர். சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவெடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் தொழில் மையமாக குஜராத் விளங்குகிறது. மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல குஜராத் இளைஞர்கள் அயராது உழைக்க வேண்டும். மத்தியிலும் குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால் மாநிலம் அதிவேகமாக முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT