Published : 11 Feb 2024 07:12 AM
Last Updated : 11 Feb 2024 07:12 AM
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த வியாழக்கிழமை மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து நைனிதால் முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. தற்போது, வன்புல்புராவில் மட்டுமே 144 தடை ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இதனால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
கலவர சம்பவம் குறித்து ஹல்துவானியில் வசிப்பவரும் ஜமாய்த்-எ-உலாமா ஹிந்தின் மாவட்டத் தலைவருமான மவுலானா முகம்மது முக்கீம் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:
இந்த மசூதி, மதரஸா சுமார் 11 வருடங்கள் பழமையானது. இதுபோல், நசூல் நிலத்தில் பல வீடுகளும், கட்டிடங்களும் ஹல்துவானியில் உள்ளன. இந்த இடிப்பு குறித்து ஜனவரி 21-ல்நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை தடுப்பதற்காக ஹல்துவானி மாவட்ட நிர்வாகத்துடன் பிப்ரவரி 4-ல் பேச்சுவார்த்தை நடத்தினோம். மறுநாள் பிப்ரவரி 5-ம் தேதி மாலை இந்தக் கட்டிடங்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
இதற்கிடையே இடிப்புக்கு தடை கோரி நாங்கள் உயர் நீதிமன்றத்தை அனுகினோம். இந்த மனுவை பிப்ரவரி 14-ல் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதுவரை காத்திருக்காமல் பிப்ரவரி 8-ல்திடீரென வந்து இடித்து விட்டனர்.நீதிமன்றத்திலும் எங்களால் தடுக்காமல் போயிருந்தால், எங்களை போன்ற முஸ்லிம் அமைப்புகள், உள்ளூர் மவுலானாக்களிடம் பேசிசமாதனப்படுத்திய பிறகு இடித்திருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை தடுத்திருக்கலாம். இப்போது இதற்கு முஸ்லிம்கள் மீது புகார் எழுந்துள்ளது. வீட்டிலிருக்கும் இளைஞர்களை பலவந்தமாக கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், கலவரம் குறித்து குமாவ் பகுதி பிராந்திய ஆணையர் தலைமையில் நீதி விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர்சிங் தாமிஅரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் அளிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள கலவரக் காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக,இக்கலவரத்தில் காவல் துறை யினருடன் பத்திரிகையாளர்களும் குறி வைக்கப்பட்டிருந்தனர். இந்தி நாளேட்டின் பத்திரிகையாளர் ஒருவரை உயிருடன் எரித்துக் கொல்லவும் கலவரக் கும்பல் முயன்றது.
இதனால், கலவரத்திற்கு காரணமான ஒருவரையும் விடாமல் கைது செய்ய இருப்பதாக முதல்வர் தாமி அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் கலவரத்தில் ஈடுபட அஞ்சும் வகையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹல்துவானி முழுவதும் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹல்துவானியின் அருகிலுள்ள நைனிதால் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கலவரம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் நின்று விட்டது.
ஹல்துவானி ரயில் நிலையமும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக சுமார் 5,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 18 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT