Published : 10 Feb 2024 04:20 PM
Last Updated : 10 Feb 2024 04:20 PM
புதுடெல்லி: “ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோர்தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தூண்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘வளர்ச்சி அடைந்த இந்தியா; வளர்ச்சி அடைந்த குஜராத்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குஜராத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 180 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதான நிகழ்ச்சி பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முடிவடைந்த பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எந்த ஓர் ஏழைக்கும் சிறந்த எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிப்பது சொந்த வீடுதான். மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகளை வேகமாக கட்டுவதற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் வீடு கட்டும் திட்டத்தின் முகமே மாறி இருக்கிறது. விரைவாக வீடுகளை கட்டி ஒப்படைப்பதை உறுதிப்படுத்த தொழில்நுட்பத்தை நாம பயன்படுத்துகிறோம்.
எனது அரசின் மிகப் பெரிய சாதனை என்னவென்றால், 25 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து விடுவித்ததுதான். 24.82 கோடி மக்கள் பலதரப்பட்ட ஏழ்மையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. இது போதாது; இன்னும் நிறைய செய்வதற்கான காலம் இது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்பதே இன்றுள்ள ஒவ்வொரு குழந்தைகளின் விருப்பமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு குடிமகனும் அவரவர் வழியில் உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோர்தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தூண்கள்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT