Published : 10 Feb 2024 11:54 AM
Last Updated : 10 Feb 2024 11:54 AM
பாஜக கட்சிக்கு கடந்த 2022-23 நிதியாண்டில் நன்கொடை மூலம் ரூ.2360.84 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையை விட 5 மடங்கு அதிகம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தங்களின் வரவு, செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ரூ.20,000-க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் பெயர் பட்டியலை பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23-ம் ஆண்டில் பாஜக.,வின் வருவாய் ரூ.2,360.84 கோடி. இதில் ரூ.1,361.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளது. இதில் 80 சதவீதம் (ரூ.1,092.15 கோடி) தேர்தல் செலவுகள்.
இவற்றில் ரூ.432.14 கோடியை விளம்பரத்துக்கு பாஜக செலவு செய்துள்ளது. பாஜக., வருவாயின் பெரும் பகுதி தேர்தல் பத்திரங்களாக வந்துள்ளன. தானாக முன்வந்து அளிக்கப்பட்ட நன்கொடை ரூ.2,120.06 கோடியில் 61 சதவீதம் (ரூ.1,294.14 கோடி) தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளன.
கடந்த 2022-2023-ம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,800.36 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது. இந்தாண்டில் மொத்தம் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 46 சதவீதம் பாஜக கட்சி பெற்றுள்ளது. 2-ம் இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 2022-23-ம் ஆண்டில் ரூ.452.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் அதன் செலவு ரூ. 467.13 கோடி. பாரத் நடை பயணத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.71.83கோடி செலவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT