Published : 10 Feb 2024 07:25 AM
Last Updated : 10 Feb 2024 07:25 AM

பிஹாரில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் அமித்ஷா காணொலியில் பேச ஏற்பாடு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு பாஜக எம்எல்ஏ.க்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாற்றவுள்ளார்.

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் பாஜக தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். இந்த அரசு நாளை மறுநாள் பிஹார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது. 243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் தே.ஜ கூட்டணிக்கு 128 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கு 114 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

இந்நிலையில் தே.ஜ கூட்டணியில் உள்ள சில எம்எல்ஏ.க்களை இழுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தே.ஜ கூட்டணியை தோல்வியடைச் செய்வோம் என 79 எம்எல்ஏ.க்களுடன் தனிப்பெரும்பான்மையாக உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறிவருகிறது.

இந்நிலையில் பிஹாரில் பாஜக எம்எல்ஏ.க்களுக்கு புத்தகயாவில் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

அதேபோல் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்கள் அனைவரும் பாட்னாவில் உள்ள அமைச்சர் விஜயகுமாரின் வீட்டுக்குவரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அமைச்சர் ஷ்ரவன் குமார் வீட்டில் இன்று விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிக்கும் முயற்சியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஈடுபட்டுள்ளது குறித்து ஐக்கிய ஜனதா மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், ‘‘ராஷ்ட்ரிய ஜனதா தள தலைமை அமைதியற்ற நிலையில் உள்ளது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு எந்த எம்எல்ஏவின் ஆதரவு இருந்தால் அதுகுறித்து அவர்கள் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x