Published : 10 Feb 2024 12:17 AM
Last Updated : 10 Feb 2024 12:17 AM
புதுடெல்லி: மக்களவையில் நீர், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திருத்த மசோதா 2024 மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி உரையாற்றினார். அப்போது அவர், மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகவே மத்திய அரசின் சட்டங்கள் உள்ளதாக குற்றம் சுமத்தினார்.
இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யான கே.நவாஸ்கனி பேசியதாவது: பாஜக அரசு மக்களுக்கு எதிரான அரசு சுற்றுச்சூழலுக்கு எதிரான அரசு, இயற்கைக்கு எதிரான அரசு. இதற்கொரு சான்றாக இந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சிதைக்கப்படுவதை இலகுவாக்கும் இந்த மசோதாவை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். இந்த மசோதா குற்றங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவாக பார்க்க முடிகிறது. இந்த அரசு ஆட்சி அரியணையில் அமர்ந்ததிலிருந்து பல சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து குற்றங்களை இலகுவாக்கும் வண்ணம் திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நீங்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் இந்த மசோதா மனிதனின் அடிப்படை வாழ்வாதாரத்தை மையப்படுத்தியது. இன்று நீர் மாசடைவதை நாம் தடுக்காவிட்டால் கடுமையான சட்டங்களின் மூலம் இந்த இயற்கை வளத்தை அளிப்பவர்களை நாம் தண்டிக்காமல் விட்டால் நாளைய தலைமுறைக்கு துரோகம் இழைத்தவர்களாக மாறிவிடுவோம். இது போன்ற சட்டங்களின் மூலம் குற்றம் இழைப்பவர்களுக்கு நீங்கள் சலுகைகளை வழங்கினால் வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது இதனை நீங்கள் அனுமதித்தால் சுற்றுச்சூழலின் முக்கிய அம்சங்களில் ஒன்றான தண்ணீர் மேலும் மாசடைவதை ஊக்குவிப்பதாக மாறிவிடும்.
இந்த சட்டத்தின் மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் சில பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இந்த அரசு இயற்றக் கூடிய அத்தனை சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. தற்போது உள்ள சட்டத்தில் பிரிவு 21-ன் படி மாநில அரசும் மாநில வாரியங்களும் இதற்கான அதிகாரங்களை பெற்றிருந்தன. ஆனால். நீங்கள் செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் அனைத்து அதிகாரங்களையும் பிரிவு 25 பிரிவு 26 மற்றும் பிரிவு 27 ஆகியவற்றிற்கு கொண்டு வந்து அனைத்தையும் மையப்படுத்த முயற்சிக்கிறீர்கள். மத்திய அரசின் நோக்கம் ‘அட்ஜூடிகேட்டிங் ஆபீஸர்’ என்ற பதவியை கொண்டு வந்து அதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது. இதற்கு, அந்த அதிகாரி ஒன்றிய அரசின் அதிகாரியாகவோ அல்லது மாநில அரசின் அதிகாரியாகவோ இருக்கலாம் என குறிப்பிடப்பட்டது காரணம்.
மாநில அதிகாரி, ஒரு தீர்ப்பளிக்கும் அதிகாரியாக இருக்க முடியுமா? என்பதை தீர்மானிக்க முழுமையான ஒரு தலைப்பட்ச அதிகாரங்கள் இந்த சட்ட திருத்தத்தின் மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மேலும், இந்த மசோதாவின் 45 சி பிரிவின்படி தீர்ப்பளிக்கும் அதிகாரியின் முடிவுகளை எதிர்த்து நேரடியாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு பெருநிறுவனம் செய்யும் நீர் மாசுபடுத்துவதை எதிர்த்து ஒரு சாமானியன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாட வேண்டிய நிலை மிகவும் ஆபத்தானது. எனவே, நீர் மாசுபடுதலை தடுப்பதற்கு என்று தனி தீர்ப்பாயத்தை கொண்டு வர இந்த அரசு முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாலித்தீன் வீசுபவர்கள் தண்டிக்கப்படுபவர்களாக இதிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் பாலித்தீன் தயாரிக்க அனுமதித்து விட்டு அதை பயன்படுத்த கூடாது என்றால் அது எப்படி முடியும். இதற்காக தொழிற்சாலையில் மீது தடை விதிக்காமல் பொதுமக்கள் மீது அபராதம் என்பது சரியல்ல.
1986-ம் சட்டப்படி எந்த ஒரு நதியிலும் தொழிற்சாலை கழிவுகள் மாசுபடுத்தப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றுள்ளது. அதன்படி இதுவரை எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்? அதேபோல குற்றம் இழைத்தவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 20 லட்சமாக இந்த அரசு உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சுற்றுச்சூழலை மாசால் பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரணத்தையும் குற்றம் செய்தவரிடமிருந்து பெற்று தர வேண்டும். கங்கையை தூய்மைப்படுத்த இந்த அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தது. ஆனால் தற்போது கங்கை நதியும் மாசடைந்த நிலையில் தான் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வட மாநிலங்கள் பலவற்றிலும் கங்கை நீர் ஓடுகின்றது. பிரதமரின் மக்களவைத் தொகுதி வாரணாசி என்பதால் அங்கு மட்டும் அதிக கவனம் பெறுகிறது. கங்கையை அரசால் சுத்தம் செய்ய முடியவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
அதில் ஒன்று மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகஸ்ட் 2021-ன்படி அமைக்கப்பட்ட நேஷனல் மிஷன் பார் கிளீன் கங்கா என்ற அமைப்புக்கு பெரும் சவாலாக இருந்தது. பல்வேறு வகையில் கங்கையில் கலக்கும் அசுத்தமான நீரை சமாளிப்பதற்காக உத்தரபிரதேசம் மதுராவில் சோதனை முறையில் ஒரு திட்டம் அமலாக்கப்பட்டது .
இது கங்கையில் அசுத்தமான நீரை சுத்தப்படுத்தி மீண்டும் தொழிற்சாலையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதனால் என்ன பலன் ஏற்பட்டது, எவ்வளவு செலவு ஆனது என்ற நிலை தெரிய வேண்டும். வடமாநிலங்கள் மற்றும் கங்கையின் மீது காட்டக்கூடிய அக்கறையை ஒன்றிய அரசு, தமிழகத்தின் காவிரி நதியின் மீது காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT