Published : 09 Feb 2024 09:57 PM
Last Updated : 09 Feb 2024 09:57 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா- 2024, மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கதிர் ஆனந்த் இம்மசோதா இந்திய அரசியலைப்பு சட்டத்துக்கு எதிரானதாக இருப்பதாக கூறினார்.
இது குறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை வேலூர் மக்களவை தொகுதி எம்பியான கதிர் ஆனந்த் பேசியதாதவது: இந்த மசோதா பல விதிமீறல்களை குற்றமற்றதாக மாற்றுகிறது. அதற்கு பதிலாக அபராதங்களை விதிக்கிறது. இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ள ஒரு கொடூரமான சட்டமாகும். மத்திய அரசு, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்துடன் கலந்தாலோசித்து, ஒப்புதலைப் பெறுவதிலிருந்து சில வகை தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது. இது மாநில உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும். கூட்டாட்சி அமைப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்த சட்டத்தின்படி, கழிவுநீரை நீர்நிலை, கழிவுநீர் கால்வாய் அல்லது நிலத்தில் வெளியேற்றும் சாத்தியம் உள்ள எந்தவொரு தொழிற்சாலை அல்லது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன் அனுமதி தேவைப்படுகிறது.
எந்த ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு முன் அதனால் நீர், காற்று, நிலம் ஆகியவற்றில் ஏற்படும் மாசு நிலைமையைக் குறித்தும் அத்தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்து அதன் பிறகே மாநில மாசுகட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கும். ஆனால் தற்போது இந்த மசோதாவில் இதற்கு விலக்கு அளிப்பதாக கூறுவது கொடூரமான சட்டத்துக்கு வழிவகுக்கும். ஓருவேளை மத்திய மாசுக்கட்டுப்பாடு விலக்களித்து தொடங்கப்பட்ட தொழிற்சாலையில் நீர் மாசுபடுதல் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநில அரசிடம் தான் முறையிடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் முறையிடுவார்கள். மத்திய அரசு அமைதியாக இருந்து பிரச்சினையிலிருந்து நழுவிவிடுவார்கள். ஆகவே, இந்த மசோதா சட்டமாவதன் மூலம் மத்திய அரசு மாநில மாசுகட்டுப்பாடு அதிகாரங்களை மீறி தங்களுக்கு வேண்டிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடியும். இது ஒரு மோசமான செயலாகும்.
இந்த மசோதா மாநில மாசுகட்டுப்பாடு வாரியம் வழங்கிய அனுமதியை எவ்வித காரணமுமின்றி ரத்து செய்ய வழிவகுக்கிறது. இது என்ன மாதிரியான மனநிலை. இந்த நாடு எதை நோக்கிச் செல்கிறது. மத்திய அரசு பெரியண்ணன் மாதிரி நடப்பது மிகவும் மோசமான செயலாகும். மாநில மாசுக்கட்டுப்பாடு தலைவர் பதவியை நியமிக்கும் உரிமையைக் கூட மத்திய அரசு எடுத்துக் கொள்ள நினைப்பது நேர்மையற்றது. மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தில் கொடுக்கப்பட்ட உரிமைகளை நசுக்கும் செயலாகும். தற்போது இந்த சட்ட திருத்தத்தின் மூலம் மத்திய அரசு இந்த மசோதா மூலம் சிறைத் தண்டனையை நீக்குவதுடன், அதற்கு பதிலாக, ரூ.10,000 முதல் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது. இது நடந்தால், சட்டத்தை மீறுபவர்கள் அபராதம் செலுத்துவதன் மூலம் எளிதில் தப்பிக்க முடியும், எந்த பயமும் இருக்காது.
சிறைத் தண்டனை மட்டுமே நிரந்தரத் தடையாக அமையும். இந்த மசோதா அந்த ஷரத்துகளை நீர்த்துப்போகச் செய்வது துரதிர்ஷ்டவசமானது. மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்அனுமதி இல்லாமலே மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி மட்டுமே பெற்று தொழிற்சாலை அமைக்கலாம் என்பது மாநில உரிமைகளில் குறுக்கீடு செயலாகும். யாருடைய நலனுக்காக மத்திய அரசு இப்போது திடீரென இந்த கொடூரமான மசோதாவைக் கொண்டு வர விரும்புகிறது, அசல் சட்டத்தில் வழங்கப்பட்ட மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறுகிறது, அதிகாரம் செலுத்துகிறது. தீர்ப்பளிக்கும் அதிகாரியால் விதிக்கப்படும் அபராதங்கள் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் கீழ் நிறுவப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியில் வரவு வைக்கப்படும். அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்பட்ட தண்டனைகளை மத்திய அரசு பறிக்கும் மற்றொரு தந்திரமாகும்.
இந்திய அரசியலமைபுச் சட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நாட்டின் காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. உள்ளூர் மற்றும் கிராம அளவிலும், அரசியலமைப்பின் கீழ் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த மசோதா மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். எனவே, இந்த மசோதா அரசியலமப்புச் சட்டத்துக்கு புறம்பானது, என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT