Published : 09 Feb 2024 08:26 PM
Last Updated : 09 Feb 2024 08:26 PM
சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது ஆந்திர தேர்தல் களம். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், அடுத்தநாளே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருக்கிறார். இரு மாநில கட்சிகள், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டுகின்றன. இதன் பின்னணி என்ன?
மக்களவைத் தேர்தலுக்கு ஆந்திர தேர்தல் களம் தயாராகி வருகிறது. கடந்த தேர்தலை பாஜக தனித்து சந்தித்தது. ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இம்முறை பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தீவிரம் காட்டி வருகிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என இரு கட்சிகளுடன் நெருக்கத்துடன் இருக்கிறது பாஜக. இதனால், யாருடன் கூட்டணி வைப்பது என்னும் குழப்பத்தில் பாஜக தலைமை இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 8-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்து பேசினார்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில், மக்களவைத் தேர்தலையும் கடந்து இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பற்றியும் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, அடுத்தநாளான இன்று (பிப்.9) ஆந்திர மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாராங்களில் பேசுபெருளாக மாறியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி - பாஜக உறவு: கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது தெலுங்கு தேசம் கட்சி. பின்னர், 2019- ஆண்டு தேர்தலில் கூட்டணியைவிட்டு வெளியேறியது. இப்போது மீண்டும் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - பாஜக உறவு: ஜெகன் மோகன் ரெட்டி பொறுத்தவரையிலும் நேரடியாகப் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், பாஜகவுக்கு ஆதரவாகத்தான் கடந்த காலங்களில் செயலாற்றி வருகிறார். குறிப்பாக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, வேளாண் சட்டத் திருத்த மசோதா, பொது சிவில் சட்டம் என பாஜக கொண்டுவந்த பல மசோதாக்களுக்கு அவரது கட்சி எம்பிக்கள் ஆதரவாகத்தான் வாக்களித்துள்ளனர்.
இப்படியாக, ஆந்திராவின் முக்கியமான தலைவர்கள் அடுத்தடுத்து பாஜக தலைவர்களைச் சந்தித்திருப்பது தேர்தல் களத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த இரு துருவங்களில் யாருடன் பாஜக கூட்டணி அமைக்கும்? இரண்டு கட்சிகளையுமே இணைத்து பலமான கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனினும், பிரதமர் மோடியை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்திருப்பது மாநில கோரிக்கைகளான ஆந்திர சிறப்பு அந்தஸ்து, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, விசாகப்பட்டினம் உருக்காலையை திரும்பப் பெறுதல், போலவரம் பாசனத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி மட்டுமே என அவரின் கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்திருப்பதை தீவிரமாக ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் விமர்சித்தும் வருகின்றனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் சஜலா ராமகிருஷ்ணா ரெட்டி, “தெலுங்கு தேசம் கட்சி உயிர் பிழைக்கவே போராடுகிறது. அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காகப் பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறது. தேர்தலில் தனித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால், பாஜகவிடம் கூட்டணி இணைவதற்கு தெலுங்கு தேசம் தலைவர் கெஞ்சி வருகிறார்” எனக் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் தரப்பு இப்படியான பதில்களை முன்வைத்த போதிலும், தேர்தல் நேரத்தில் இவர்களின் சந்திப்பைக் கூட்டணிப் பேச்சுவார்த்தையுடன் முடிச்சுப்போட்டு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஒரு வெற்றியைக் கூட ஆந்திராவில் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், பாஜகவுடன் இரு பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் நிலைமை ஆந்திர மாநிலத்தில் கவலைக்கிடம்தான் என்னும் கருத்துகளும் சொல்லப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT