Published : 09 Feb 2024 01:28 PM
Last Updated : 09 Feb 2024 01:28 PM

சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பில், "முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.

உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் எப்போதும் உத்வேகம் அளித்தார். அவசரநிலைக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்துக்கான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதபோல், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறித்த அறிவிப்பில், "நமது முன்னாள் பிரதமர்பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டிற்காக அவர் பணிபுரிந்தார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் என ஒவ்வொரு பணியின் மூலமும் நரசிம்ம ராவ் சமமாக நினைவுகூரப்படுகிறார். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற அவரது தலைமை முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அவர் அமைத்தார்.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலம், பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தது. மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் வழங்கிய பங்களிப்புகள் மகத்தானவை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை செழுமைப்படுத்திய ஒரு தலைவராக நரசிம்ம ராவ் திகழ்ந்தார்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது குறித்த அறிவிப்பில், "விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் எம்.எஸ்.சுவாமிநாதன் முக்கியப் பங்கு வகித்தார். மேலும், இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

கண்டுபிடிப்பாளராக, வழிகாட்டியாக, ஏராளமான மாணவர்களிடம் கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தவராக திகழ்ந்த அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. நான் நெருக்கமாக அறிந்த சிலரில் அவரும் ஒருவர். அவருடைய நுண்ணறிவையும், சேவையையும் நான் எப்போதும் மதிப்பேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x