Published : 09 Feb 2024 04:37 AM
Last Updated : 09 Feb 2024 04:37 AM
புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது என்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது எனஒப்பீடு செய்து மத்திய அரசு வெள்ளைஅறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். 59 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் முதல் 24 பக்கங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பொருளாதார தோல்விகள் குறித்தும், அதன்பிறகு, பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசின் பொருளாதார மேம்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பொருளாதாரம் மோசமடைய தொடங்கியது. 1991-ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கையை கொண்டுவந்ததை பெருமையாக பேசி வந்தவர்கள், 2004-ல் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கொள்கைகளை அப்படியே கைவிட்டார்கள். காமன்வெல்த் விளையாட்டுகள், 2ஜி அலைக்கற்றை, சாரதாசிட் ஃபண்ட், ஐஎன்எக்ஸ் மீடியா, ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் என பெரிய அளவிலான பல ஊழல்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நடந்தன.
வாராக் கடனும், நிதி பற்றாக்குறையும் உச்சத்தில் இருந்தன. பணவீக்கம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இரட்டைஇலக்கத்தில் இருந்தது. முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் சூழல் உருவானது. ஒட்டுமொத்தமாக, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பரிதாபமான நிலைக்கு சென்றது.
இத்தகைய சூழலிலேயே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸின் மோசமான திட்டங்களால் சரிந்து போன பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினோம்.
2014-ம் ஆண்டு உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில்10-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது
இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கரோனா, சர்வதேச அரசியல் பிரச்சினை என பல தடைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றியுள்ளோம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு: புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மாநிலங்களவை எம்.பி.க்கள் 68 பேரின் பதவிக் காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் நிறைவு பெறுகிறது. அவர்களுக்கான பிரிவுபச்சார விழா நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 6 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக திறம்பட பணியாற்றியவர். கொள்கைரீதியாக நானும், அவரும் வேறுபட்டுள்ளோம். சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்டிருக்கிறோம். எனினும், இந்த அவையையும், நாட்டையும் அவர் நீண்டகாலம் வழிநடத்தி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது, சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். வாக்கெடுப்பில் ஆளும்கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறும் என்று தெரிந்தும், தனது வாக்கை பதிவு செய்தார். ஒரு எம்.பி. எப்படி தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் மிகச் சிறந்த உதாரணம். நமக்கு வழிகாட்டியாக, ஊக்கசக்தியாக அவர் எப்போதும் இருக்க வேண்டும். அவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இதற்கிடையே, பாஜக அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கறுப்பு அறிக்கையை வெளியிட்டார். இதுகுறித்து பிரிவுபச்சார விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும்போது வீட்டு பெரியவர்கள் அந்த குழந்தைக்கு கருப்பு நிற திருஷ்டி பொட்டு வைப்பார்கள். பிரம்மாண்ட வளர்ச்சியுடன் தெய்வீக பூமியாக பாரதம் மாறிவரும் நேரத்தில் காங்கிரஸ் கறுப்பு அறிக்கை வெளியிட்டதை, பாஜக ஆட்சிக்கான திருஷ்டி பொட்டாக கருதுகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT