Published : 09 Feb 2024 06:17 AM
Last Updated : 09 Feb 2024 06:17 AM
புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்ட நூலில் ராமர் - சீதை ஓவியம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரல்’நிகழ்ச்சியில் இதை நினைவுகூர்ந்ததன் பின்னணி என்னவாக இருக்கும் எனும் கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. டாக்டர் பீமராவ் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு ஆராய்ந்து எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்ட நூல் 233 பக்கங்களில் தயாரானது. இதனை பிரேம் பிஹாரி நாராயண் ராய்ஜாதா, 6 மாத காலத்தில் சித்திர எழுத்துகளால் வடிவமைத்தார். இந்நூலில் இந்தியாவின் வரலாறு,கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை நினைவுகூரும் வகையில் 22 நுண்ணிய ஓவியங்களும் தீட்டப்பட்டன.
இவற்றை, மேற்கு வங்கத்தின் சாந்திநிகேதன் பல்கலைக்கழக பேராசிரியர் நந்தலால் போஸ் தலைமையில் அவரது மாணவர்கள் குழு வரைந்தது. இதில், ராவணனை வெற்றிகொண்டு மீட்கப்பட்ட சீதையுடன் ராமர் மற்றும் லட்சுமணன் நாடு திரும்பும் காட்சி, முதல்அத்தியாயத்திலேயே இடம் பெற்றுள்ளது. இதுபோல், மகாபாரத காட்சியுடன் புத்தர், மகாவீரர், குரு கோவிந்த் சிங், அக்பர், திப்பு சுல்தான், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோரின் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் ஜனவரி 28-ல் தனது ‘மனதின் குரல்’நிகழ்ச்சியில் பேசினார். இந்த உரையில் அவர் ராமரின் புகழையும் மையப்படுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது உரையில், “நமது அரசியலமைப்பு சட்டமானது உயிருள்ள ஒரு வாழும் ஆவணம் என அழைக்கப்படுகிறது. இது எழுதப்பட்ட முதல் நூலின் 3-வது அத்தியாயத்தில் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றுஎன்னவெனில், இந்த 3-வது அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே கடவுள் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஓவியமாக வரையப்பட்டுள்ளனர். இது, கடவுள் ராமரின்நிர்வாகமும் நமது சட்டங்களை இயற்றியவர்களின் உத்வேகத்திற்கு ஆதாரமாகி இருந்ததை காட்டுகிறது. இதனால்தான் நான் ஜனவரி 22-ல் அயோத்தியில் நாட்டின் கடவுளை பற்றி பேசினேன், நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களை அயோத்தி ஒரேநேர்கோட்டில் கொண்டுவந்துள்ளது. அனைவரது பாவனை ஒன்று,அனைவரின் பக்தி ஒன்று, ஒவ்வொருவரும் ராமநாமம் ஜெபிக்கின்றனர். ஒவ்வொருவரின் பக்தியிலும்மனதிலும் ராமர் இடம் பெற்றுள்ளார்” என்றார்.
இதுபோல், ராமரை இந்திய தேசத்துடன் இணைத்து பேசியதுபிரதமர் மோடி மட்டும் அல்ல. இவருக்கு முன் கடந்த ஆகஸ்ட் 5, 2020-ல் மத்திய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தும் சமூகவலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இத்துடன், அரசியலமைப்பு சட்ட நூலில் இடம்பெற்ற ராமர், சீதை, லட்சுமணன் ஓவியத்தின் படத்தையும் இணைத்திருந்தார். இது, அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வுக்கான கருத்தாகப் பார்க்கப்பட்டது.
பிறகு ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று எதிர்க்கட்சியினர் மத்தியில் சமீபத்தில் விமர்சனம் எழுந்தது. அதை கண்டிக்கும் வகையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர், “ராமரை கற்பனை பாத்திரம் என்று கூறுவோர் மிகுந்த சிந்தனையுடனும் மனசாட்சியுடனும் இந்த ஓவியத்தை வைத்தவர்களை அவமதித்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டின் பின்னணியிலும் பார்க்கப்பட்ட அரசியல் தற்போது பிரதமரின் நினைவுகூரலிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த மூன்றிலும் கூறுவதைப் போல்இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மதங்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த 22 ஓவியங்களின் பிரதிபலிப்புகள், இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் இல்லை என்பதும் இடதுசாரிசிந்தனை கொண்ட வரலாற்றாளர்களின் கருத்தாக உள்ளது. சிந்துசமவெளி நாகரிகம் முதல் முகலாயர்கள் காலம் வரை இந்தியாவில் தொடர்ந்த வரலாற்றில்தான் ராமரும் ஓர் ஓவியமாக நினைவுகூரப்படுவதாக நீதித்துறையிலும் பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT