Published : 08 Feb 2024 07:09 PM
Last Updated : 08 Feb 2024 07:09 PM

மாலத்தீவில் ராணுவ வீரர்களுக்கு பதில் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்கிறது இந்தியா

புதுடெல்லி: மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தியா - மாலத்தீவு இடையே கடந்த 2ம் தேதி நடைபெற்ற இரண்டாவது உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இந்த மாதத்துக்குப் பிறகு நடைபெறும். மாலத்தீவில் மூன்று விமானப்படைத் தளங்களில் இந்திய ராணுவம் உள்ளது. அவர்கள், மாலத்தீவு மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.

வரும் மார்ச் 10ம் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வரும் மே 10ம் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப்படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு மாற்றாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதனை இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

மாலத்தீவில் உள்ள இந்திய விமானப் படைத் தளங்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சாத்தியமுள்ள தீர்வுகளை உருவாக்க இந்தியாவும் மாலத்தீவும் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70 பேர் உள்ளனர். கடலோர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள டோர்னியர் 228 ஹெலிகாப்டர் ஒன்றும், ஹெச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர் இரண்டும் மாலத்தீவில் உள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-க்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவுக்கு ரூ. 779 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 600 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் வளர்ச்சிக்கான பங்குதாரராக இருப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. வரும் காலங்களில் மாலத்தீவு மூலம் கிடைக்கும் தெளிவை தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீடு மாற்றப்படலாம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x