Published : 08 Feb 2024 04:29 PM
Last Updated : 08 Feb 2024 04:29 PM

ஹேமந்த் சோரனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொகுசு கார் யாருடையது? - அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் கைப்பற்றப்பட்ட காரின் விவரங்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.

நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜனவரி 20 அன்று ஜார்க்கண்டில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் இல்லத்துக்கே வந்து விசாரித்து சென்றனர் அமலாக்க அதிகாரிகள்.

எனினும், விசாரணை முழுமையடையததால் மீண்டும் ஆஜராக வேண்டும் என ஹேமந்துக்கு 9-வது முறையாக சம்மன் அனுப்பினர். ஆனால் ஆஜராகவில்லை. இதன்பின் ஜனவரி 29 அன்று புது டெல்லியில் உள்ள அவரின் சாந்தி நிகேதன் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் உடன் ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பின் சில தினங்களில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் கைப்பற்றப்பட்ட பிஎம்டபிள்யூ சொகுசு கார் யாருடையது என்பது குறித்த தகவல்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த கார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸின் ராஜ்யசபா எம்பியான தீரஜ் பிரசாத் சாஹூவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த தீரஜ் பிரசாத்துக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தீரஜ் பிரசாத் மதுபான வியாபாரம் செய்துவரும் நிறுவனத்தை நடத்திவருபவர்.

அவரின் நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.351 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. அந்த சமயத்தில் தீரஜ் பிரசாத்தின் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டுக்கட்டாக எண்ணும் வீடியோ காட்சிகள் வைரலாகின. 40 கரன்சி எண்ணும் இயந்திரங்கள் உடன் இந்த பணத்தை மீட்டெடுக்க 10 நாட்கள் ஆனது. இவரின் கார் தான் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். தற்போது ஹேமந்த் சோரனை கைது செய்துள்ள நிலையில், தீரஜ் பிரசாத் சாஹுவையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத் துறை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x