Published : 08 Feb 2024 04:41 PM
Last Updated : 08 Feb 2024 04:41 PM
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இப்போதைய சூழலில் திரிணமூல் 22 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் நிலவுவதாக ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (Mood of the Nation - MOTN) என்ற தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.
இதற்காக இந்த நிறுவனம் 35,081 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு 2023 டிசம்பர் 15 முதல் 2024 ஜனவரி 28 வரை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 40 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அதே வாக்கு சதவீதமாகும்.
அதேவேளையில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 53 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அக்கட்சி 2019-ல் பெற்ற வாக்கு சதவீதத்தைவிட 4 சதவீதம் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
2019 மக்களவைத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவுக்கு இடையே நெருங்கிய போட்டி நிலவியது. பாஜக 18 இடங்களையும், திரிணமூல் 22 இடங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், வரும் தேர்தலில் திரிணமூல் தனித்தே களம் காணும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணியிடம் தான் நடத்திய தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் தேர்தலைத் தனியாக எதிர்கொள்ளப் போவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பு மம்தாவுக்கு களம் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT