Published : 08 Feb 2024 06:09 AM
Last Updated : 08 Feb 2024 06:09 AM
புதுடெல்லி: அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு எதிர்ப்பு தெரிவித்தார் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில்நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் உரையாற் றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியாவின் திறன், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் குறித்து எடுத்துரைத்தார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எத்தனையோ மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்தது. ஊடகங்களை முடக்கவும் நாட்டை துண்டாடவும் காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால் இப்போது ஜனநாயகம் பற்றியும் கூட்டாட்சி தத்துவம் பற்றியும் காங்கிரஸ் கட்சி பாடம் எடுக்கிறது.
நாட்டில் தீவிரவாதம் செழிக்க அவர்கள் அனுமதித்தார்கள். வடகிழக்கு மாநிலங்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருந்தார்கள். மாவோயிசம் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்க காரணமாக இருந்தார்கள். இந்திய நிலப்பரப்பை எதிரி நாட்டுக்கு தாரை வார்த்தார்கள். ராணுவத்தை நவீனப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் இப்போது நாட்டின் பாதுகாப்பு குறித்து பாடம் எடுக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இந்த நேரத்தில்நினைவுகூர்கிறேன். அவர் ஒருமுறை மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘எந்த வகையிலும் இடஒதுக்கீடு வழங்குவதை நான் விரும்பவில்லை. குறிப்பாகவேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால், அரசின் நிர்வாக திறமையின்மைக்கு வழிவகுக்கும். அரசுப் பணியின் தரம் குறைந்துவிடும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
நேருவைப் பின்பற்றி காங்கிரஸ்கட்சி எப்போதும் எஸ்.சி., எஸ்.டி.நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குகிறோம். அரசு திட்டங்களின் பயனாளர்களாக அவர்கள் இருக்கிறார்கள். எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தஒருவரை குடியரசுத் தலைவராக நியமித்துள்ளோம்.
40-ல் வெற்றி பெற பிரார்த்தனை: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களில்கூட வெற்றி பெற முடியாது என மேற்கு வங்கத்திலிருந்து (மம்தா பானர்ஜி) சவால் வருகிறது. ஆனால் காங்கிரஸ் குறைந்தபட்சம் 40 தொகுதியிலாவது பெற்றி பெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிப்பு: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 9-ம் தேதியுடன் முடியும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கூட்டத் தொடர் ஒரு நாள்அதாவது 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி உள்ளது என்பது குறித்து, கூட்டத்தொடரின் கடைசி நாளில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT