Last Updated : 19 Feb, 2018 05:07 PM

 

Published : 19 Feb 2018 05:07 PM
Last Updated : 19 Feb 2018 05:07 PM

கோத்தாரி ரூ.800 கோடியை மோசடி செய்தாரா?-கடனை திருப்பி செலுத்தவில்லை: வழக்கறிஞர் பேச்சால் பரபரப்பு

ரோட்டாமேக் பேனா நிறுவனத்தின் அதிபர் விக்ரம் கோத்தாரி வங்கியில் பெற்ற ரூ.800 கோடி கடனை மோசடி செய்த புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆனால், கோத்தாரி வழக்கறிஞர் பிர்லா, ''கோத்தாரி ரூ.800 கோடியை வங்கிக் கடனை மோசடி செய்யவில்லை, பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார். அவ்வளவுதான்'' எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே கான்பூரைச் சேர்ந்த ரோட்டாமாக் எனும் பேனா நிறுவனத்தின் அதிபர் விக்ரம் கோத்தாரி பல்வேறு வங்கிகளில் ரூ.800 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக வங்கிகள் சார்பில் சிபிஐ அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆகிய வங்கிகளில் கோத்தாரி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து கோத்தாரி வட்டியை முறையாகச் செலுத்தாத காரணத்தால், அவரை வங்கிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாத நபர்கள் பட்டியலில் சேர்த்து அவரின் பெயரை நாளேடுகளில் வெளியிட்டன.

மேலும், வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் ரூ.3,600 கோடி வரை கோத்தாரி மோசடி செய்தார் எனக் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இன்று காலை கான்பூரில் உள்ள கோத்தாரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோத்தாரியின் மகன், மனைவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, வாக்கு மூலங்களைப் பெற்றனர். இதையடுத்து, கோத்தாரி மீது முறைப்படி முதல் தகவல் அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ''பேங்க் ஆப் பரோடா வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு தரப்பில் கோத்தாரி ரூ. 3 ஆயிரத்து 695 கோடி மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் அவரின் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தோம்'' எனத் தெரிவித்தனர்.

ஆனால், கோத்தாரி கைது செய்யப்படவில்லை. முதலில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட நிலையில், அவரின் வழக்கறிஞர் மறுத்து கான்பூரில்தான் கோத்தாரி உள்ளார் என உறுதியளித்தார்.

இதில் மும்பையைச் சேர்ந்த யூனியன் வங்கி ரூ.485 கோடியும், கொல்கத்தாவைச் சேர்ந்த அலகாபாத் வங்கி ரூ.352 கோடியும் கடன் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மோசடியா?- கடனை திருப்பிச் செலுத்தவில்லை

இதற்கிடையே கோத்தாரியின் வழக்கறிஞர் ஷரத் குமார் பிர்லாவிடம் நிருபர்கள் மோசடி குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், ''கோத்தாரி வங்கியில் இருந்து ரூ.800 கோடி கடன் பெற்று இருக்கிறார். இந்தக் கடனை அவர் தொழில் வளர்ச்சிக்காகவே பெற்றார். இதை அவரால் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், கடனை கட்டாதவர்கள் என்று வழக்கின்கீழ்தான் கொண்டுவர வேண்டும். அவர் வங்கியை மோசடி செய்யவில்லை, மோசடி வழக்கிலும் சேர்க்கக் கூடாது. இன்னும் சிபிஐயிடம் இருந்து அறிக்கை வரவில்லை. கிடைத்தபின் பேசுகிறேன்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x