Published : 07 Feb 2024 05:56 AM
Last Updated : 07 Feb 2024 05:56 AM
புதுடெல்லி: வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் உள்ள ஒரேநபர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து நீக்க வேண்டும் என்று சம்விதான் பச்சாவோ டிரஸ்ட் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்கள் நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்பட்டியலில் புதிதாக 2.68கோடி பேரின் பெயர்கள் சேர்க் கப்பட்டுள்ளன.
மேலும் 1.66 கோடி நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி நாட்டில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அசாம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம்,தெலங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தவிர்த்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. இந்தமாநிலங்களில் தேர்தல் நடந்ததால் அங்கு வாக்காளர் பட்டியலில்திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபர்களில் இறந்தவர்கள் விவரம், நிரந்தரமாக வீடு அல்லது ஊர்மாறியவர்கள் விவரம், பெயர்நீக்கப்பட்ட நபர்களின் விவரங்களை தனித்தனியாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT