Published : 07 Feb 2024 05:27 AM
Last Updated : 07 Feb 2024 05:27 AM
சென்னை: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதில் கேரளாவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றுஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான, பாரபட்சமானகட்டுப்பாட்டை செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள கேரள அரசை பாராட்டுகிறேன். மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் மறைமுக கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில், முற்போக்கான மாநிலங்கள் இடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது.
மாநிலங்களின் பொது செலவினங்களுக்கு நிதி அளிப்பதற்கான பொதுக் கடன் என்பது, அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில சட்டப்பேரவையின் தனிப்பட்ட அதிகாரவரம்புக்கு உட்பட்டது. இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு தனக்கு உள்ளஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது.
‘மத்திய அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும்’ என்று, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஷரத்து, நிதி பற்றாக்குறையை நேர்செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இது, நிதி கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் தொடர்ந்து 15 சதவீத வளர்ச்சியை அடைந்தபோதும், 2023-24-ம் ஆண்டில் நிகர கடன் உச்சவரம்பை கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பு ஆண்டில், ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன்பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் மொத்த இழப்புக்கு நிதி அளிக்க வேண்டும்என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் நிதி வாய்ப்புகளை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.
மூன்றாவதாக, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்தது. இதனால் இத்திட்டத்துக்கான மொத்த கடனான ரூ.33,594 கோடி முழுவதும், மாநிலத்தின் நிகர கடன் உச்சவரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஜிஎஸ்டி மூலம்மாநிலங்களின் நிதி தன்னாட்சிகடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அரசியலமைப்புக்கு முரணான, பாரபட்சமான இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை தமிழக அரசு எதிர்கொண்டு வருகிறது. இழப்பீட்டு திட்டத்தையும் நீட்டிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில், நிதி கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழகஅரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் திமுக பங்கேற்பு: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘டெல்லியில் கேரள அமைச்சரவை பிப்.8-ம் தேதி (நாளை) நடத்த உள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து திமுகவும் பங்கேற்கும். தெற்கில் நாம், பினராயி விஜயன், கிழக்கில் மம்தா என இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது உறுதியான பற்றுதல் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களின் குரல்கள்தான் வேறு, கொள்கை ஒன்றுதான். நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மாநிலங்களின் உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
வைகோவும் ஆதரவு: மத்திய அரசை கண்டித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுகவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
‘தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி என பலமாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய பாஜக அரசு செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை தொடர்ந்து சிதைத்து வரும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்.8-ம் தேதி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்த உள்ளது. இப்போராட்டத்தை மதிமுக வரவேற்கிறது. மதிமுக நிர்வாகிகள் இப்போராட்டத்தை ஆதரித்து பேசுவார்கள்’ என்று பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT