Published : 07 Feb 2024 04:40 AM
Last Updated : 07 Feb 2024 04:40 AM
டேராடூன்: நாட்டிலேயே முதல்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர்புஷ்கர் சிங் தாமி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு முன்னதாகவே, உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார். சட்டத்தை மாநிலத்தில் அமலாக்கியே தீருவேன் என்றும் அவர் தெரிவித்துஇருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்தலைமையில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. சுமார் ஓராண்டாக மக்களிடம் கருத்துகளை கேட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்தது.
இந்நிலையில், அந்த அறிக்கையை பொது சிவில் சட்ட வரைவாக தயாரித்து உத்தராகண்ட் அரசிடம் வழங்கியது. இதற்கு உத்தராகண்ட் மாநில அமைச்சரவை கடந்த 4-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொருமதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற பொது சிவில் சட்டம் வழியமைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் 4 நாள் சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்தொடரை முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த 5-ம் தேதி கூட்டினார். பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்காகவே இந்த கூட்டம் தொடங்கியது.
சட்டப்பேரவையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட மசோதாவை நேற்று காலை தாக்கல் செய்தார். அப்போது அவையில் இருந்த பாஜக எம்எல்ஏக்கள் “வந்தே மாதரம், ஜெய் ராம்” என கோஷமிட்டனர்.
பொது சிவில் சட்ட மசோதா மீது நேற்று பிற்பகல் முதல் மாலைவரை உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். இன்று மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னர் இது சட்டமாக்கப்பட்டு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்திருந்தது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போதுமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள் போன்றவை சமமாக உள்ள நிலையில் தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் மட்டும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்ஸிக்கள் எனபல்வேறு மதத்தினருக்கு தனித்தனியாக உள்ளன. இதை ஒரே சட்டமாக்குவதுதான் பொது சிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவுக்கான சட்ட முன்வடிவுக்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி, சமூக செயற்பாட்டாளர் மனு கவுர், உத்தராகண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்க்வால் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருந்தனர்.
இந்த குழு 740 பக்கங்கள், 4 பகுதிகளை கொண்ட பொதுசிவில் சட்ட வரைவை உருவாக்கியது. மேலும், லட்சக்கணக்கான மக்களிடம் ஆன்லைன் மூலமாக கருத்துகளை பெற்றதாகவும், 43 கூட்டங்களை கூட்டி 60 ஆயிரம் மக்களிடம் இது தொடர்பாக விவாதம் நடத்தியதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது.
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படியே இந்த பொது சிவில் சட்ட மசோதா உருவானதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவில்.. மசோதா தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் சுதந்திரத்துக்கு பிறகு நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.
கோவாவில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் உள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT