Published : 07 Feb 2024 06:55 AM
Last Updated : 07 Feb 2024 06:55 AM
புதுடெல்லி: பாஜகவுக்கு நாய்களின் மீது என்ன அவ்வளவு பிரியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை கடந்த ஜனவரி 14-ம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், காரின் மேற்புறத்தில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அவர் அருகே நாய் குட்டி ஒன்று இருந்தது.
ராகுல் காந்தி அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். அப்போது அந்த நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து அந்த பிஸ்கட்டை அருகில் இருந்த நபரிடம் கொடுக்கிறார். பிறகு அந்த நாய், அந்த நபர் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட்டது.
இந்நிலையில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில், பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பதிவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக அமித் மாளவியா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் கட்சியினரை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்த கட்சி மாயமாகிவிடும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட பதிவில்கூறும்போது, ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தாலும், காங்கிரஸில் நான் இருந்தபோது அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு இந்தியன். நான் சாப்பிட மறுத்து காங்கிரஸில் இருந்து விலகினேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாஜகவினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசியது:
அந்தப் செல்லப் பிராணி நடுங்கி கொண்டிருந்தது. நான் பிஸ்கட் கொடுத்தபோது அது பயந்திருக்க வேண்டும். எனவே, நாயின்உரிமையாளரிடம் பிஸ்கட் கொடுத்து கொடுக்கச் சொன்னேன்.அதன் பிறகு நாய் பிஸ்கட்டைச் சாப்பிட்டது. இதில் என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. பாஜகவுக்கு நாய்கள் மீது அப்படி என்ன பிரியம் எனத் தெரியவில்லை” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT