Published : 16 Feb 2018 02:19 PM
Last Updated : 16 Feb 2018 02:19 PM
ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மார்ச் மாதம் 5-ம் தேதிக்குள் மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தெலுங்கு தேசம் கட்சி கெடு விதித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.
, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.
இதனால், சமீபத்தில் நடந்த முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ஆதிநாராயாண ரெட்டி அமராவதி நகரில் நிருபர்களிடம் கூறுகையில், ''ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள 19 வாக்குறுதிகளை மத்திய அரசு வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறும். அதுமட்டுமல்லாமல், மத்திய அமைச்சரவையில் இருந்து எங்கள் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.
கடும் பணத் தட்டுப்பாடு
இதற்கிடையே ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஏடிஎம்களில் கடும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இருந்த பணத் தட்டுப்பாடு ஏடிஎம்களில் நிலவுகிறது. மக்கள் பணம் எடுக்க ஏடிஎம் முன் நீண்டவரிசையில் காத்திருக்கிறார்கள். உடனடியாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கி கவர்னரும் தலையிட்டு, ஏடிஎம்களுக்கு போதுமான பணம் நிரப்ப வழி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT