Published : 06 Feb 2024 09:21 PM
Last Updated : 06 Feb 2024 09:21 PM

“மக்களை முழு பலன்கள் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை, சமூக நீதி” - பிரதமர் மோடி @ கோவா

வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

கோவா: "திட்டப் பயன்கள் முழுமையாக மக்களை சென்றடைவது என்பதே உண்மையான மதச்சார்பின்மை. இதுவே உண்மையான சமூக நீதி. இது கோவாவுக்கும் நாட்டுக்கும் மோடியின் உத்தரவாதம்" என்று வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ.1,330 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் இன்று தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் நரேந்திர மோடி பார்வையிட்டார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் கல்வி, விளையாட்டு, நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிப்பது போன்றவை அடங்கும். வேலைவாய்ப்புத் திருவிழாத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் வழங்கினார்.

கோவாவின் இயற்கை அழகு மற்றும் அழகிய கடற்கரைகளை எடுத்துரைத்து தமது உரையைத் தொடங்கிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு கோவா விருப்பமான விடுமுறை இடமாக உள்ளது என்று கூறினார். ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கோவாவில் எந்தப் பருவத்திலும் அனுபவிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். கோவாவில் பிறந்த துறவிகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

துறவி சோஹிரோபநாத் அம்பியே, நாடக ஆசிரியர் கிருஷ்ணா பட் பாந்த்கர், பாடகர் கேசர்பாய் கெர்கர், ஆச்சார்யா தர்மானந்த் கோசாம்பி மற்றும் ரகுநாத் அனந்த் மஷேல்கர் ஆகியோரை அவர் நினைவு கூர்ந்தார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் நினைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் அருகிலுள்ள மங்குஷி கோயிலுடனான தமது நெருங்கிய தொடர்பையும் எடுத்துரைத்தார். மார்கோவில் உள்ள தாமோதர் சால் மூலம் சுவாமி விவேகானந்தர் புதிய உத்வேகம் பெற்றார் என்று அவர் மேலும் கூறினார்.

"கொய்கோ சாய்ப்" என்று பிரபலமாக அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் புனித நினைவுச் சின்னங்களின் கண்காட்சி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது குறித்தும் பிரதமர் பேசினார். இந்தக் கண்காட்சி அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சின்னம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜார்ஜியாவின் புனித ராணி கெட்டேவனையும் நினைவு கூர்ந்தார். அவரது புனிதச் சின்னங்கள் வெளியுறவுத் துறை அமைச்சரால் ஜார்ஜியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகத்தினரின் அமைதியான சகவாழ்வு 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 1300 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோடி, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்கள் கோவாவின் வளர்ச்சிக்கு புதிய உந்துதலைக் கொடுக்கும். தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் மற்றும் தேசிய நீர் விளையாட்டு மற்றும் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதி வளாகம், 1930 பணி நியமன கடிதங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் .

கோவா பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறியதாக இருந்தாலும், அது சமூக ரீதியாக வேறுபட்டது. பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக அமைதியாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம். மாநிலத்தின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சிகளுக்கு கோவா மக்களின் உணர்வு எப்போதும் பொருத்தமான பதிலடி கொடுக்கும் .

கோவா அரசின் நல்லாட்சி மாதிரி, இது நல்வாழ்வின் அளவுகோலில் கோவா மக்களின் முதன்மையான நிலைக்கு வழிவகுத்தது. இரட்டை இன்ஜின் அரசின் காரணமாக கோவா வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய அரசின் பல திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர், மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்புகள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டு திட்டப்பலன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைந்துள்ளது.

திட்டப்பலன்கள் முழுமையாக சென்றடைவது, பாகுபாட்டை நீக்குவதற்கும் அனைத்து பயனாளிகளுக்கும் நன்மைகளை முழுமையாக வழங்குவதற்கும் வழிவகுக்கிறது. முழுமையாக பலன்கள் மக்களைச் சென்றடைவது என்பது உண்மையான மதச்சார்பின்மை. இதுவே உண்மையான சமூக நீதி. இது கோவாவுக்கும் நாட்டுக்கும் மோடியின் உத்தரவாதம்.கோவாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் உதவியுள்ளது.

இந்த ஆண்டு பட்ஜெட் , திட்டங்களின் செறிவூட்டல் குறித்த அரசின் தீர்மானத்திற்கு இது உத்வேகம் அளித்துள்ளது. 4 கோடி பாதுகாப்பான வீடுகள் என்ற இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்ட பின்னர், ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளுக்கு அரசாங்கம் இப்போது உத்தரவாதம் அளிக்கிறது. பாதுகாப்பான வீடுகளைப் பெறுவது குறித்து கோவா மக்கள் பின்தங்கியவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டு பட்ஜெட்டில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் திட்டம் ஆகியவை மேலும் விரிவுபடுத்தப்படும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. மீனவ சமூகத்திற்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் ஆதாரங்களை இது மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் கடல் உணவு ஏற்றுமதி மற்றும் மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும். இதுபோன்ற முயற்சிகள் மீன்வளத் துறையில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. மீன் வளர்ப்பவர்களின் நலனுக்கான, பிரத்யேக அமைச்சகம் அமைத்தல், கிசான் கடன் அட்டை வசதி, காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்துதல் மற்றும் படகுகளை நவீனப்படுத்துவதற்கான மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது.

ஏழைகளின் நலனுக்காக பெரிய திட்டங்களை செயல்படுத்துவதோடு, உள்கட்டமைப்பிலும் இரட்டை இன்ஜின் அரசு சாதனை முதலீடுகளை செய்து வருகிறது. நாட்டில் சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்களின் வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. ஒவ்வொரு நபரின் வருமானமும் அதிகரிக்கிறது.

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும், கோவாவை ஒரு சரக்குப் போக்குவரத்து மையமாக நிறுவுவதற்கும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கோவாவில் மனோகர் பாரிக்கர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைத் தொடர்ச்சியாக இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது நீளமான கேபிள் பாலமான நியூ ஜுவாரி பாலம், கடந்த ஆண்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. புதிய சாலைகள், பாலங்கள், ரயில் வழித்தடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை காரணமாக கோவாவில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி கோவாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும்.

இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தின் மூலம் இந்திாயவை ஒரு முழுமையான சுற்றுலா தலமாக நிலைநிறுத்துவதற்காத அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. நம் நாட்டில் அனைத்து வகையான சுற்றுலாவும் ஒரே விசாவில் கிடைக்கிறது. சுற்றுலா தலங்கள், கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை முந்தைய அரசுகளுக்கு இல்லை. கோவாவின் கிராமப்புறங்களில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலாவின் திறனை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கோவாவை மேலும் கவர்ச்சிகரமான இடமாக மாற்ற நவீன வசதிகளை அரசு மேம்படுத்தும்.

மாநாட்டு சுற்றுலாவுக்கான சுற்றுலாத் தலமாக கோவாவை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. 2024-ம் ஆண்டின் இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியை இன்று தொடங்கிவைத்ததேன். கடந்த ஆண்டுகளில் கோவாவில் பல முக்கியமான ஜி 20 கூட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான தூதரக நிலையிலான கூட்டங்கள் நடந்துள்ளன. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், உலக கடற்கரை கைப்பந்துப் போட்டி, ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி மற்றும் 37 வது தேசிய விளையாட்டு போன்ற போட்டிகள் கோவாவில் நடைபெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கான மிகப்பெரிய மையமாக கோவா மாறும்.

கோவாவில் கால்பந்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. விளையாட்டில் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக பிரம்மானந்த் ஷங்க்வால்கருக்கு பத்ம விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாநிலத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்க உதவும்.

கல்வியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கோவாவில் பல்வேறு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மாநிலத்தை ஒரு முக்கிய கல்வி மையமாக அரசு மாற்றியிருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கும் பயனளிக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவின் விரைவான வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி தேவை. மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்", என்று பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய சுற்றுலா துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோவாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக கட்டப்பட்ட வளாகத்தில் பயிற்சி வளாகம், துறை வளாகம், கருத்தரங்கு வளாகம், நிர்வாக வளாகம், விடுதிகள், சுகாதார மையம், பணியாளர் குடியிருப்பு, வசதி மையம், விளையாட்டு மைதானம் மற்றும் நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிற பயன்பாடுகள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.

தேசிய நீர்விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படைகளின் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்யும் நீர் விளையாட்டுகள் மற்றும் நீர் மீட்பு நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்ட 28 படிப்புகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. தெற்கு கோவாவில் 100 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இது நாள் ஒன்றுக்கு 60 டன் ஈரமான கழிவுகள் மற்றும் 40 டன் உலர் கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உபரி மின்சாரத்தை உருவாக்கும் 500 கிலோ வாட் சூரிய மின் நிலையத்தையும் கொண்டுள்ளது.

பனாஜி மற்றும் ரெய்ஸ் மாகோஸ் பகுதிகளை இணைக்கும் சுற்றுலா நடவடிக்கைகளுடன் பயணிகள் ரோப்வே திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தெற்கு கோவாவில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களையும் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x