Published : 06 Feb 2024 08:33 PM
Last Updated : 06 Feb 2024 08:33 PM
புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்தின் தீவிரத்தால் அருகிலுள்ள நர்மதாபுரம் மாவட்டத்தின் சியோனி மால்வாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த மக்களை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த வெடிவிபத்து காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் பேசியுள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், விபத்து குறித்து முழு தகவல்களையும் வழங்கும்படி கேட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக துயரமான செய்தி வந்துள்ளது. அமைச்சர் உதய் பிரதாப் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தூர் மற்றும் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீய காய பிரிவுகள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT