Published : 06 Feb 2024 06:45 PM
Last Updated : 06 Feb 2024 06:45 PM
புதுடெல்லி: “இண்டியா’ கூட்டணி என்று எதுவும் இல்லையென நினைக்கிறேன். இண்டியா கூட்டணி துவக்கத்தில் இருந்தே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஐ.சி.யூ-வுக்கு சென்றது. அதன்பிறகு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டது” என காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளரும், மூத்த தலைவருமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம் செய்திருக்கிறார்.
பிஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரும், ‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கை கோர்த்து, வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. இவரது அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்துக் களம் காண இருப்பதாக, அக்கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவத் மான் அறிவித்தார். இதையடுத்து ‘இண்டியா’ கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் சமீபத்தில் இருந்தே கட்சித் தலைமையின் சில முடிவுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில், ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “‘இண்டியா’ கூட்டணி என்று எதுவும் இல்லையென நினைக்கிறேன். ‘இண்டியா’ கூட்டணி துவக்கத்தில் இருந்தே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஐ.சி.யூ-வுக்கு சென்றது. அதன்பிறகு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டது.
நிதிஷ் குமார்தான் இண்டியா கூட்டணியின் இறுதிச் சடங்குகளை பாட்னாவில் செய்தார். இனி ‘இண்டியா’ கூட்டணி என்ற ஒன்று இருக்காது என்றுதான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணம் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிப்ரவரி 19 அன்று நடைபெறவிருக்கும், சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதோடு தனது எக்ஸ் பதிவில், "பிப்ரவரி 19 அன்று நடைபெறவிருக்கும் ஸ்ரீ கல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது” எனப் பதிவிட்டிருந்தார். அவரது பதிவுக்கு பதிலளித்த மோடி, "நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடைய இந்த புனிதமான நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். அழைப்புக்கு ஆச்சார்யா பிரமோத் ஜிக்கு மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ குறித்து பிரமோத் கிருஷ்ணம் கூறுகையில், மற்ற அரசியல் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் 2029 தேர்தலுக்கு தயாராகி வருகிறது என கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT