Published : 06 Feb 2024 05:17 PM
Last Updated : 06 Feb 2024 05:17 PM

லிவ்-இன் உறவாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?

டேராடூன்: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரதியை கைகளில் ஏந்தியவாறு வந்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. அங்கு போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய பொது சிவில் சட்ட நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமணம், விவாகரத்து, நில உரிமை, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் ஆகியவை தொடர்பான சட்டங்கள் அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், இந்த மசோதாவில், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், அது குறித்து பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு மாதத்துக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது.

இதனையடுத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 800 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x