Published : 06 Feb 2024 01:29 PM
Last Updated : 06 Feb 2024 01:29 PM
புதுடெல்லி: தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக மக்களவையில் திமுக குற்றம் சாட்டியதை அடுத்து, திமுக - பாஜக எம்பி.,க்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய திமுக எம்பி ஆ. ராசா, “தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக பல முறை கேள்வி எழுப்பியும் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது” என விமர்சித்தார்.
அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், “மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள நிதி ரூ. 2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தி இருக்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு மத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி உள்ளது. 2010-15-ல் பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 33,591 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2015-20ல் இது ரூ.61,220 கோடியாக உயர்த்தப்பட்டது. 2021-26-ல் இது ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்த்தப்பட உள்ளது” என விளக்கம் அளித்தார்.
அதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன் என திமுக தரப்பில் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, மத்திய இணை அமைச்சர் முருகன் எழுந்து பதிலளித்தபோது, அவரைப் பார்த்து உட்காரும்படி டி.ஆர். பாலு கையசைத்தார். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் அமளி நிலவிய நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்பிக்களோடு கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தமில்லாத அமைச்சரான முருகன் எழுந்து பதில் அளித்தார். அதோடு, தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பேசும்போது, எங்கள் பேச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு முருகன் செயல்பட்டார். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது; ஓரவஞ்சனையாக நடத்துகிறது. இதைக் கண்டித்து வரும் 8ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT