Published : 06 Feb 2024 12:22 PM
Last Updated : 06 Feb 2024 12:22 PM
ரத்னகிரி(மகாராஷ்டிரா): இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரையும் ஏற்கக்கூடியது எங்கள் இந்துத்துவா என்று சிவ சேனா(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ரத்னகிரி மாவட்டம் ராஜபூர், சிப்லுன் நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பொதுக்கூட்டத்துக்கு காவிநிற தொப்பி அணிந்தவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்களும் வந்திருப்பதைப் பார்க்கிறேன். இங்கே சத்ரபதி சிவாஜியின் சிலையும் இருக்கிறது, இஸ்லாமியர்கள் வழிபடக்கூடிய தர்காவும் இருக்கிறது. சமீபத்தில் நான் ராய்காட் வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தவர்கள் எனக்கு மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்ட குரானை பரிசாக அளித்தார்கள். எங்கள் இந்துத்துவா எது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன். எங்கள் இந்துத்துவா மதங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடியதோ, சமூகங்களுக்கு இடையே உள்ள உறவில் தீயைப் பற்ற வைப்பதோ அல்ல. இது அனைவரையும் உள்ளடக்கியது. எனக்குப் பின்னால் இந்து சமூகம் நின்றதைப் போல, தற்போது இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களும் என்னோடு இணைந்துள்ளார்கள். நாட்டை சூழ்ந்திருக்கும் சர்வாதிகார ஆபத்தில் இருந்து காக்க, சாதி, மதத்தை விட்டுவிட்டு நாம் அனைவரும் நாட்டுப்பற்றோடு ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். நாட்டுக்காக போராடி மடிந்த அனைவருக்கும் ஆதரவாக நிற்கக்கூடியதே எங்கள் கட்சியின் இந்துத்துவா.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தப் பார்க்கிறது. மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சியின் ராஜன் சால்வி மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திர வைக்கர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருக்கிறது. மத்திய விசாரணை அமைப்புகளின் அழுத்தத்துக்கு அவர்கள் அடிபணியவில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சோதனையான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான தன்மையை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இவர்கள் இருவரும் சிவ சேனா(யுபிடி) மீதான தங்கள் பற்றில் உறுதியாக இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT