Published : 06 Feb 2024 06:15 AM
Last Updated : 06 Feb 2024 06:15 AM

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் விதி மீறல்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டிப்பு

புதுடெல்லி: சண்டிகர் மாநகராட்சி தேர்தல் விவகாரத்தில், ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்துள்ளார்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. இந்த சண்டிகர் மாநகராட்சிக்கு சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இண்டியாகூட்டணி இணைந்து எதிர்கொண்டது. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்ட நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இதில் தேர்தலுக்கு முன்பு இண்டியா கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால் அவரே வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வீடியோ வெளியிட்டன. மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாத ஓட்டாக இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் அதிகாரி மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரிசண்டிகர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார். சண்டிகர் மேயர், மாநகராட்சி கூட்டத்தை கூட்ட தடைவிதிக்கிறேன்.

அனைத்தையும் உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருப்பதாக சண்டிகர் மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் (ஆர்ஓ) கூறுங்கள். ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயகத்தின் தூய்மை மட்டுமே இந்த நாட்டில் உறுதியான சக்தியாக உள்ளது’’ என்றார்.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை உயர் நீதிமன்ற பதிவாளர் மூலம் தாக்கல் செய்யுவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x