Published : 15 Feb 2018 03:53 PM
Last Updated : 15 Feb 2018 03:53 PM

மதத்தைக் காரணம் காட்டி தாக்குதலையோ, கொலையையோ நியாயப்படுத்த முடியாது: புனே ஐடி ஊழியர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

கடந்த ஜூன் 2, 2014 அன்று புனேயில் ஐடி ஊழியரான 24 வயது மோசின் ஷைக் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கேள்விக்குட்படுத்தி மாற்றியுள்ளது.

அதாவது சொந்தப் பகைமைக் கொலைக்குக் காரணமல்ல மதம்தான் காரணம் எனவே ஜாமீன் வழங்கலாம் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, பலியானவர் இன்ன மதத்தை, இன்ன சமூகப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காகக் கொலையை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

கொலை நடந்த அன்று மோசின் ஷைக் உன்னட்டி நகரில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கும்பல் ஒன்று இவரை கடுமையாக ஏசி பிறகு ஆயுதங்களால் தாக்கியது, இதில் மோசின் கொல்லப்பட்டார், இது தொடர்பாக இந்து ராஷ்டிர சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஹாக்கி மட்டை, தடிகள், கற்கள் என்று மோசினைத் தாக்கிக் கொலை செய்தனர், இந்த கும்பலில் 2 சிறாரும் இருந்தனர் என்கிறது அரசு தரப்பு. மேலும் இந்தக் கொலைக்கு முன்னால் இந்து ராஷ்டிர சேனா அமைப்பின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். மோசின் பச்சை ஆடை அணிந்திருந்ததும், தாடி வைத்திருந்ததும் அவரை தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது என்று அரசு தரப்பு கூறியுள்ளது

கைது செய்யப்பட்டவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளிக்கையில், “பலியானவரின் ஒரே தவறு அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதே” என்று குற்றம்சாட்டப்பட்டோரை விமர்சித்தாலும் சொந்தப் பகை இல்லை என்று கூறி ஜாமீன் அளிக்கமால் என்றது.

ஆனால் இந்தக் கொலை திட்டமிட்டு நடைபெற்றதே, இந்து அமைப்புக் கூட்டத்துக்குப் பிறகு தூண்டப்பட்டே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது என்று அரசு தரப்பு வாதிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஏ.போப்தே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர அடங்கிய அமர்வின் முன் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “கொல்லப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை, அல்லது பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக கொலையை நியாயப்படுத்த முடியாது” என்றார்.

மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் ஜாமீனுக்கான காரணத்தை விமர்சிக்கையில், “நாட்டின் பன்முகத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும், பல்வேறு சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே ஒரு மதம் அல்லது ஒரு பிரிவினருக்கு எதிராகவோ, சாதகமாகவோ பாரபட்சமான கருத்துகளை நீதிபதிகள் தவிர்த்தல் அவசியம்” என்றனர்.

புனே அமர்வு நீதிமன்றம் இதே வழக்கில் ஜாமீன் அளிக்க மறுத்துக் கூறும்போது, “சிவாஜி மன்னரை இழிவுபடுத்தியது காரணமல்ல அவர் முஸ்லிம் என்பதனாலேயே கொல்லப்பட்டுள்ளார்” என்று கண்டித்தது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றமோ சொந்தப் பகை இல்லாததால் ஜாமீன் கொடுக்கலாமென்று உத்தரவிட்டது.

இதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும் பிப்.16-ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x