Published : 05 Feb 2024 05:43 PM
Last Updated : 05 Feb 2024 05:43 PM
டார்கெட் தென்னிந்தியா... பாஜகவின் புதிய பிளான் என்ன? மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக நிலை என்ன? வாக்கு வங்கி அதிகரிக்க பாஜக வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன? இம்முறை தென் மாநிலங்களில் வெற்றியைப் பதிவு செய்யுமா பாஜக? - இதோ ஒரு விரைவுப் பார்வை.
இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாஜகவால் தடம் பதிக்க முடியவில்லை. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. இதனால், தென்னிந்தியா பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களாகவே மாறியிருக்கிறது. எனவே, கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடுகையில், பாஜக வாக்கு வங்கி தென்னிந்தியாவில் அதிகரிக்குமா? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாகக் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிலை குறித்து பார்த்துவிடலாம்.
தமிழகம்: கடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் அங்கம் வகிந்திருந்தது பாஜக. இதில் ஓர் இடத்தை மட்டுமே இந்தக் கூட்டணி பிடித்தது. அந்தத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3.66%. தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால், மூன்றாவது கூட்டணி அமைக்கும் முனைப்பில் இருக்கிறது பாஜக. குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் இதர கூட்டணியுடன் இணைந்தால் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகளைப் பதிவு செய்யலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இறுதியான கூட்டணி லிஸ்ட் இன்னும் வெளிவரவில்லை.
ஆந்திரா பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலைப் பாஜக தனித்து சந்தித்தது. அதில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 0.96% மட்டும்தான். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என இரு கட்சிகளுடன் நெருக்கத்துடன் இருக்கிறது பாஜக. இதனால், யாருடன் கூட்டணி வைப்பது என்னும் குழப்பத்தில் பாஜக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இல்லை.
கர்நாடகம்: கடந்த மக்களவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பாஜக அங்கு தேர்தலை சந்தித்தது. அதில் போட்டியிட்ட 28 இடங்களில் 26 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. கூட்டணி வாக்கு சதவீதம் 53.38%. அதில் பாஜகவின் வாக்கு சதவீதம் மட்டும் 51.38% என்பது குறிப்பிடதக்கது .
தற்போது, மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் மாநில கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசுவாமியைச் சந்தித்து பேசி வருகின்றனர். எனவே, அவர்கள் இருவரும் இணைந்து கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் ஜனதா தளக் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. இந்தக் கூட்டணி 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டும்தான் பாஜக சற்றே ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலிலும் கர்நாடகத்தில் மட்டும்தான் தனித்து அதிகமான வாக்கு வங்கியைப் பாஜக கொண்டிருந்தது. இருப்பினும், அங்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது பாஜக. இதனால், சற்றே சுதாரித்துக் கொண்டு அங்கு வெற்றி பெற்ற இடங்களையாவது தக்கவைத்துக் கொள்ள பல அரசியல் நகர்வுகளைச் செய்து வருகிறது. எனவே, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தால் வொக்கலிகா வாக்குகளை ஒருங்கிணைக்கவும், அதே வேளையில், மூத்த தலைவர் எடியூரப்பாவை வைத்து லிங்காயத் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக வேலைகளில் முழு மூச்சில் செய்து வருகிறது.
கேரளா: இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. அதில் போட்டியிட்ட 19 இடங்களில் முழுவதுமாக தோல்வியைத் தழுவியது. அதில் 15 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு 12.93% மட்டும்தான். இம்முறை கேரள ஜனதளத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. அதேபோல்,கேரளாவில் ஜனபக்ஷம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், பெருவாரியான கிறிஸ்தவ வாக்குகளைக் கைப்பற்ற முடியும் என பாஜக நம்புகிறது.
தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து பாஜக கடந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. இதில், 17 இடங்களில் 4 இடங்களை மட்டுமே பாஜக கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக வாக்கு சதவீதம் 19.7% . இம்முறை, தெலங்கானாவில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது பாஜக. இதில் சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி இணையுமா என்பது கேள்வியாக உள்ளது. அவர்களிடையே பேச்சுவார்த்தை நடப்பது பற்றி அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அம்மாநில காங்கிரஸ் கட்சி பாஜக - பிஆர்எஸ் கூட்டணி சேருவதாகக் கருத்து தெரிவித்து வருகிறது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ளது. இதில் கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 31.9% . இங்கு பாஜக தனித்துக் களம் காணவிருப்பதாக தற்போது வரை தகவல் சொல்லப்பட்டு வருகிறது.
பாஜகவின் தென்னிந்தியா டார்கெட்... இம்முறை நிறைவேறுமா? - தமிழகத்தில், அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட மோதலைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக காய் நகர்த்தியது. இதனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. பின், சட்டசபைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்தது. இது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே அமைந்த வெற்றி. இந்த நிலையில்தான், தங்களின் வெற்றி பறிக்கப்படும் என்னும் பயத்தில் பாஜகவிட்டு விலகியிருக்கிறது அதிமுக.
அதேபோல், 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால், 15 மாதங்கள் மட்டுமே ஆட்சி நடந்தது. ஜனதா தள எம்எல்ஏக்கள் பதவி விலகியதைத் தொடந்து பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் குமாரசுவாமி ஆட்சியை இழந்தார். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. அதன்பின், பாஜக கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது. இப்படியாக, தென்னிந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க பல வழிகளில் பாஜக அரசியல் செய்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய கடும் திட்டங்களைத் தீட்டி வருகிறது. தமிழகத்தை நோக்கி பாஜகவின் முக்கியமான தலைவர்கள் வருகை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி. பின், ராமர் கோயில் திறப்பு விழா முன்னதாக தமிழகம் வந்து தீர்த்தங்களைக் கொண்டு சென்றார். கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்க மீண்டும் தமிழகம் வந்தார்.
அதேபோல், இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றார் மோடி. சாலை வாயிலாக ’ரோட் ஷோ’ நடத்தினார். பின், குருவாயூர் கோவிலுக்குச் சென்றார். அதேபோல், திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க ஆந்திரா சென்றார்.
இப்படியாக, பாஜகவின் முக்கியமான ‘டாஸ்க்’ ஆக இருப்பது தென்னிந்தியாவில் அதிக தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், தென் மாநிலங்களில் பாஜக மாநில கட்சிகள் சார்ந்து மட்டுமே தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கர்நாடகத்தில் மட்டும்தான் பாஜகவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. மற்ற மாநிலங்களில் அமைக்கும் கூட்டணி அடிப்படையில்தான் பாஜக வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும். அது அவர்களுக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுந்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT