Published : 05 Feb 2024 06:32 AM
Last Updated : 05 Feb 2024 06:32 AM
குவாஹாட்டி: அசாமில் கிறிஸ்தவ மதத்தை அனுமதியின்றி பரப்ப முயன்றதாக 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் திஸ்பூர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் 2 அமெரிக்கர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து சோனிட்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுசந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “சுற்றுலா விசா மூலம் வந்துள்ள 2 அமெரிக்கர்கள், முறையான அனுமதியின்றி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு தலா 500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது” என்றார்.
உலகின் பல்வேறு நாடுகளின் கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த பலர் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் போல வந்து, கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகின்றனர் என இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை செய்து தருகிறோம் என்ற பெயரில் இந்துக்களை மதம் மாற்ற முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
அசாம் மாநிலம் கோலாகாட் மற்றும் திப்ருகார் மாவட்டங்களில் விசா விதிகளை மீறி மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த 7 பேர், ஸ்வீடனைச் சேர்ந்த 3 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT