Published : 05 Feb 2024 07:07 AM
Last Updated : 05 Feb 2024 07:07 AM
ஹைதராபாத்: “உங்கள் மனைவி உங்களிடம் கோபமாக கத்தினால், நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள். அதுதான் ஆண்மைக்கான அடையாளம்” என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி அவரதுகட்சிக் கூட்டம் ஒன்றில் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஆண்கள் தங்கள் மனைவியிடம் நடந்துகொள்ளும் முறை குறித்து அசாதுதீன் ஓவைசி தன் கட்சிக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார். தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
“ஆடையைத் துவைத்து தரவில்லை என்றும் சரியாக சமைக்கவில்லை என்றும் பல ஆண்கள் தங்கள் மனைவியை விமர்சிக்கின்றனர். மனைவி தன் கணவனுக்கு ஆடைகளைத் துவைத்துத் தர வேண்டும் என்றோ, சமைத்துத் தர வேண்டும் என்றோ குர்ஆன் சொல்லவில்லை. கணவன் தன் மனைவியை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றே குர்ஆன் கூறுகிறது. மனைவியின் வருமானத்தில் கணவன் உரிமை கோரக் கூடாது. அதேசமயம், கணவனின் ஊதியத்தில் மனைவி உரிமை கோரலாம் என்று அது கூறுகிறது. காரணம் அவள்தான் வீட்டை நிர்வகிக்கிறாள்.
பலர் தங்கள் மனைவியிடம் மூர்க்கமாக நடந்துகொள்கின்றனர். அது மிகவும் மோசமான நடத்தை. மனைவியிடம் கோபத்தை வெளிப்படுத்துவது ஆண்மை இல்லை. மனைவி எவ்வளவு கோபமாக நடந்துகொண்டாலும் அதை பொறுமையாகக் கையாளுவதே ஆண்மை. எனவே, என் சகோதரர்களே, உங்கள் மனைவி கோபமாக இருக்கும்போது நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள்” என்று அவர் பேசி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT