Published : 05 Feb 2024 08:46 AM
Last Updated : 05 Feb 2024 08:46 AM

ஹேமந்த் சோரனுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி - ஜார்க்கண்ட்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

சம்பய் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வராக சம்பய்சோரன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள போரியோ தொகுதியின் எம்எல்ஏ லோபின் ஹெம்ப்ரோம், பிஷுன்பூர் தொகுதி எம்எல்ஏ சாம்ரா லிண்டா உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். அவர் பழங்குடியின மக்களின் நலனுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வெளிப்படையாக விமர்சித்து மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிருப்தி எம்எல்ஏ லோபின் ஹெம்ப்ரோம் கூறுகையில், “2019தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பழங்குடி சமூகத்தினரின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, பிஇஎஸ்ஏ சட்டம் பழங்குடியினரை சுரண்டலில் இருந்து பாதுகாக்க கிராமசபைக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். இந்த சட்டத்தை அமல்படுத்தாத காரணத்தால்தான் ஜார்க்கண்ட் பச்சாவோ மோர்ச்சாவை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமான நிலையம், அணைகள் மற்றும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் பழங்குடியினரின் நிலத்தை மாநில அரசு பறித்துள்ளது’’ என்றார்.

இதேபோன்று, பிஷுன்பூர் தொகுதியைச் சேர்ந்த மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான சாம்ரா லிண்டா, ஜேஎம்எம் அரசு பழங்குடியினர் நலனுக்காக இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசை விமர்சனம் செய்துள்ளார்.

சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்க இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்களை ஒற்றுமையாக பங்கேற்க வைப்பதில் ஜேஎம்எம் மும்முரம் காட்டி வருகிறது. இந்தசூழலில், அரசுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களால் சம்பய்சோரன் அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜேஎம்எம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்காத நிலையில், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பங்கேற்பார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஞ்சி திரும்பிய எம்எல்ஏக்கள்: ஜார்க்கண்ட் முதல்வராக ஜேஎம்எம் கட்சியைச் சேர்ந்த சம்பய் சோரன் பதவியேற்ற நிலையில், எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதை தடுக்க அவர்கள் அனைவரும் ஹைதராபாத் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று ஹைதராபாத்திலிருந்து ராஞ்சிக்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரு இடம் காலி யாக உள்ளது. எஞ்சியுள்ள 80 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜேஎம்எம் கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணிக்கு மொத்தம்46 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. ஜேஎம்எம் (28), காங்கிரஸ் (16), ஆர்ஜேடி (1), சிபிஐ (எம்எல்)1. அதேநேரம், பாஜக கூட்டணிக்கு 29 எம்எல்ஏக் களின் ஆதரவு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x