Published : 05 Feb 2024 01:25 AM
Last Updated : 05 Feb 2024 01:25 AM
லே: மீண்டும் மாநில அந்தஸ்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். சனிக்கிழமை அன்று அங்கு முழு அடைப்பு காரணமாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகவும் சென்றனர்.
அரசியலமைப்பு பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மீண்டும் மாநில அந்தஸ்து ஆகியவற்றைக் வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் லே நகரில் கூடி போராட்டம் மேற்கொண்டனர். லே அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது.
சீனாவை ஒட்டிய பகுதியில் வசித்து வரும் லடாக் பகுதியை சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். லடாக் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான இந்தக் குழு, தனது முதல் கூட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி நடத்தியது. அடுத்த கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு மக்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் மேற்கொள்வது வருவது வழக்கமாக உள்ளது.
கடந்த 2019, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370-ம் பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி நள்ளிரவில் அதிகாரபூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT